வணக்கஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு பிணையில் வர முடியாத வகையில் மிகக் கடுமையான தண்டனை
வணக்கஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு பிணையில் வர முடியாத வகையில் மிகக் கடுமையான தண்டனையினை வழங்கக் கூடியதொரு புதிய சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கும் அம்பாறைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்குவதற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமரின் ஒலுவில் விஜயத்தின்போது விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் வேண்டுகோள் விடுத்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீசின் வேண்டுகோளுக்கு அமைவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் அழைப்பில் பிரதமரும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க அம்பாறை பள்ளிவாசல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு ஞாயிற்றுக்கிழமை (04) ஒலுவிலுக்கு விஜயம் செய்து அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல் சம்மேளன பிரதிநிதிகள், புத்திஜீவிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை ஒலுவில் சுற்றுலா விடுதியில் சந்தித்து கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர், அலிசாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கயளான ஆரிப் சம்சுதீன், ஏ.எல்.தவம், பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்போது பிரதி அமைச்சர் ஹரீஸ் பிரதமரிடம் கடும்தொனியில் பிரச்சினைகளை விபரித்து உரையாற்றுகையிலேயே மேற்குறித்த வேண்டுகோளை விடுத்தார்.
No comments