நிலத்தில் அமர்ந்து மேற்கொண்ட எதிர்ப்பினால் பாராளுமன்ற சபை அமர்வு ஸ்தம்பிதம்
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டி திகன சம்பவம் உள்ளிட்ட இனவாத தாக்குதல்களை எதிர்த்து இன்று (6) செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற சபை அமர்வு நடைபெறும்போது சபை அமர்வை புறக்கணித்து பாராளுமன்றத்தினுள் நிலத்தில் அமர்ந்து கோசமிட்டவர்களாக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இனவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட கண்டி திகன பிரதேசங்களுக்கு நேரில் சென்று அம்மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரவல நிலையினை கண்ணுற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பாராளுமன்ற அமர்வுக்கு விரைந்து சென்று ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் குறித்த இனவாத தாக்குதலால் முஸ்லிம் இளைஞரின் உயிர் அநியாயமாக காவு கொள்ளப்பட்டுள்ளதனையும் தான் கண்ணுற்ற விடயங்களையும் கூறி பாராளுமன்ற சபை அமர்வின்போது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்திருந்தார்.
அதற்கமைவாக பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், ஏ.எல்.எம். நசீர், பைசால் காசிம், அமீர் அலி, ஏ.ஆர். இஸ்ஸாக், இம்ரான் மஃரூப், எம்.எஸ். தௌபீக், முஜிபுர் ரகுமான் ஆகியோர் எச்.எம்.எம். ஹரீசுடன் இணைந்து பாராளுமன்ற அமர்வு நடைபெறும்போது நிலத்தில் அமர்ந்து முஸ்லிம்; சமூகத்தை பாதுகாக்குமாறு கோசமிட்டு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இவர்களுடன் றிசாத் பாதியுதீன் பின்னர் இணைந்து செயற்பட்டார்.
இவ்வெதிர்ப்பு நடவடிக்கையின்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் 'முஸ்லிம் சமூகத்திற்கு பாதுகாப்பு இல்லை', 'முஸ்லிம் சமூகம் அழிந்துகொண்டிருக்கிறது உடனடியாக பாதுகாப்பை தா', 'மக்களை பாதுகாரு' போன்ற கோசங்களை எழுப்பினர். அதையடுத்து சபை நடைவடிக்கைகள் சீர்குலைந்தது.
இதன்போது தினேஸ் குணவர்தன குறுக்கிட்டு இந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக கவனத்தில் எடுக்குமாறு கூறினார். அதைத் தொடர்ந்து விமல் வீரவன்ச இது சம்பந்தமாக பேசினார். அத்தோடு சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல ஏற்கனவே இது சம்பந்தமாக நாட்டில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவசரமாக அமைச்சரவை கூடி இது தொடர்பில் ஆராய்வதாகவும் கூறி பாராளுமன்ற உறுப்பினர்களின் போராட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இருந்தபோதிலும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் 'இதிலிருந்து விலகமாட்டோம், எங்களுடைய சமூகம் அழிந்து கொண்டிருக்கிறது, பாதுகாப்பை தருவதற்கு அரசு தவறிவிட்டது' என்று மிக காட்டமான குரலில் கூறினர்.
இதையடுத்து சபைக்கு தலைமை தாங்கிய செல்வன் அடைக்கலநாதன் சபையை விட்டு மிக அவசரமாக சபாநாயகர் கரு ஜயசூரியவை நோக்கி விரைந்தார், கரு ஜயசூரிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சபை நடவடிக்கைகளை சீர் குலைக்காதீர்கள் எனக் கேட்டதோடு இது சம்பந்தமாக ஜனாதிபதி அவசர கால நிலையை பிரகடனப்படுத்தி தற்போது அது சம்பந்தமான விவாதங்கள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டு குறித்த பிரச்சினை தொடர்பில் பேசி தீர்க்கலாம் என்று கூறி சபை முன் அமர்ந்திருப்பதைவிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுடைய ஆசனத்திற்குச் செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரது வேண்டுகோளையும் நிராகரித்து விட்டனர். 'தங்களுடைய சமூகத்திற்கு பாதுகாப்பை தாருங்கள்' என்று மீண்டும் கோசமெழுப்பினர். இதைத் தொடர்ந்து வெளியிலிருந்த பல சிரேஷ்ட அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, தயாகமகே, காமினி ஜெயவிக்ரம போன்ற பலர் பிரதமரின் அலுவலகத்திற்குச் சென்று பிரதமரை உடனே அழைத்து வந்தனர்.
வருகைதந்த பிரதமர் மீண்டும் நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்குரிய பாதுகாப்பை பிரதமர் என்ற அடிப்படையில் உறுதிப்படுத்துவதாக கூறியதோடு குறித்த சம்பவங்கள் தொடர்பில் இதுவரை பிரதமர் எடுத்த நடவடிக்கைகளையும் விபரித்துக் கூறினார். தற்போது அவசர காலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அம்பாறை மற்றும் கண்டி பிரதேசங்களில் நடைபெற்ற சம்பவங்களுக்கு பொறுப்பான குற்றவாளிகளை கைது செய்வதாகவும் அதே நேரம் நாடு பூராகவும் உள்ள முஸ்லிம்களை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் சபையில் உறுதியளித்திருந்தார்.
இதன்போது பிரதி அமைச்சர் ஹரீஸ் பிரதமரின் அம்பாறை விஜயத்தின்போது கண்டி திகன பிரதேசத்தில் பதட்ட நிலை காணப்படுவதாகவும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுமாறும் கேட்டுக் கொண்டதை சுட்டிக்காட்டி அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க தவறியமையினால் இப்பெரும் விபரீதம் நடைபெற்றுள்ளதாக பிரதமரிடம் தெரிவித்ததோடு இது மிகப் பெரிய ஏமாற்றத்தை எங்களுக்கு தந்திருக்கின்றது என்று பிரதமருடைய மூஞ்சில் அடித்தவாறு பிரதி அமைச்சர் ஹரீஸ் கூறினார். இதன்போது இது சம்பந்தமாக தீர்க்கமான நடவடிக்கை எடுப்பதாக கூறி பிரதமர் ஆசனத்தில் அமர்ந்தார்.
ஆனால் தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோசமிட்டவாறு இருந்தனர். இச்சந்தர்ப்பத்தில் ஏனைய சிரேஷ்ட அமைச்சர்களான பௌசி போன்றவர்கள் தற்காலிகமாக இவ்வெதிர்ப்பு நடவடிக்கையினை கைவிட்டு பிரதமருடன் மீண்டும் விரிவாக பேசி தீர்வு காண்போம் எனக்கூறி இவ் எதிர்ப்பு நடவடிக்கையினை தற்காலிகமாக கைவிடுமாறு கோரினர். அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற எதிர்ப்பு நடைவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
No comments