Header Ads

காசாவுக்குள் ஊடுருவிய இராணுவ பீரங்கிகள்: தரைவழித் தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்!


ஹமாஸ் மீது தாக்குதல் நடத்தும் வகையில் இஸ்ரேலிய இராணுவத்தின் தரைப்படைகள் காசா பகுதிக்குள் பெரிய அளவில் ஊடுருவியது என இஸ்ரேலின் இராணுவ வானொலி அறிவிப்பை மேற்கோள்காட்டி ரொயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

இதனை உறுதிப்படுத்திடும் விதமாக இஸ்ரேல் இராணுவத்தின் பீரங்கிகள் காசா பகுதிகளுக்குள் நுழைந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

தரைவழித் தாக்குதல் நடத்தும் நோக்கத்தோடு சில வாரங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட சோதனையைவிட நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனை பெரியது என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

இஸ்ரேலின் இராணுவத்தின் வானொலியும் தரைவழி ஊடுருவலை உறுதிப்படுத்தியுள்ளது. போரை நிறுத்த சர்வதேசத் தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது. பிரதமர் நெதன்யாகு தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது என அறிவித்த சில மணிநேரங்களில் இஸ்ரேலின் இராணுவத்தின் பீரங்கிப் படை வடக்கு காசாவுக்குள் நுழைந்துள்ளன.

எனினும், சில மணிநேரங்களில் பீரங்கிகள் அனைத்தும் காசாவில் இருந்து பின்வாங்கியுள்ளன. இஸ்ரேல் பாதுகாப்புப் படை இந்த நடவடிக்கையை, 'தரைவழித் தாக்குதலுக்கான ஒத்திகை' எனக் குறிப்பிட்டுள்ளது. 

மேலும், 'அடுத்த கட்ட போருக்கான ஆயத்தம்' என்றும், சில மணிநேரங்களில் இராணுவ வீரர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறி இஸ்ரேலிய பகுதிக்கு திரும்பிவிட்டனர் என்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

முன்னதாக, இஸ்ரேல் மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா மீதான தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் இராணுவம் தயாராகி வருகிறது. எப்போது, எப்படி என்பதை நான் விரிவாகக் கூறமாட்டேன். ஆனால், ஹமாஸின் இலக்குகளை அழிக்க, காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம்.

எங்களது இறையாண்மையை காக்கவும், எங்களின் இருப்புக்காகவும் போரில் ஈடுபட்டுள்ளோம். இந்தப் போரில் இரண்டு அடிப்படை நோக்கங்களை அமைத்துக் கொண்டுள்ளோம். அவை, ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறனை ஒழிப்பது. பிடிபட்டுள்ள பணயக் கைதிகளை மீண்டும் அழைத்துவருவது. இந்த நோக்கங்களை நிறைவேற்ற தேவையான அனைத்தையும் இஸ்ரேல் செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசாவுக்கு உடனடி உதவிகள் தேவை என உலக சுகாதார நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. 

மருந்துகள், சுகாதார பொருட்கள் இல்லாமல், காசாவின் மருத்துவமனைகள் கற்பனை செய்ய முடியாத மனிதாபிமான பேரழிவின் விளிம்பில் உள்ளன. காசாவுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் தேவை. உதவிகள் கிடைத்தால் மட்டுமே, காசா மீண்டெழ முடியும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவசரமாக தேவைப்படும் மனிதாபிமான உதவிகளை காசாவுக்குள் கொண்டு வருவதற்கு இஸ்ரேல் முழு போர்நிறுத்தத்திற்கு உடன்பட வேண்டும் என பாலஸ்தீன வெளியுறவு அமைச்சர் ரியாத் அல்-மலிகி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மேலும், இம்முறை இஸ்ரேல் நடத்தும் போர் வித்தியாசமானது. இந்த முறை இது பழிவாங்கும் போர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.