உரிமை கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்: இரா. சாணக்கியன் திட்டவட்டம்
உரிமை இழந்தோம் காணிகளையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா. தோல்வி நிலையென நினைத்தால் தன்மான தமிழன் வாழ்வை நினைக்கலாமா. எமது அறவழி போராட்டம் எமது மக்களுக்காக எந்த தடை வந்தாலும் உரிமை கிடைக்கும் வரை என்றும் தொடரும் என்று இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரை அகிம்ம்சை வழி போராட்டத்தில் நேற்று பொலிஸாரின் கொடுபிடிகளுக்கு மத்தியில் பண்ணையாளர்களுடன் போராட்டக்களத்தில் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கலந்துகொண்டார்.
இதன்போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை போராட்டம் இன்று 24ஆவது நாட்களாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்து கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் 24 நாட்கள் போராட்டம் பூர்த்தியாகும் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருக்கின்றார்.
மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களது பிரச்சினை நியாயமானது. இதற்கொரு தீர்வு வேண்டும். இதன் காரணமாகத்தான் நாங்கள் பண்ணையாளர்களுடன் இணைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் மற்றும் சிவில் அமைப்புக்கள், ஏனைய அரசியல் கட்சிக்கள் மற்றும் பொது அமைப்புக்களுடன் இணைந்து இந்த போராட்டத்தினை மேற்கொள்வதற்கு தயார் நிலையில் இருந்தோம்.
ஆனால், இன்று காலையில் செங்கலடி பாடசாலையில் இருக்கும் மாணவர்களது கௌரவத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்தோம்.
ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்பு செங்கலடி பாடசாலைக்கு ஒரு நிகழ்விற்காகவே விஜயம் செய்துள்ளார்.
அந்த நிகழ்வினை குழப்புவது எங்களது நோக்கம் அல்ல. அதிபர் கலந்து கொள்ளும் நிகழ்விற்கு எந்தவொரு இடையூறும் ஏற்படுத்தாமல் வீதியோரத்தில் நாங்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தோம்.
ஆனால் பொலிஸார் அவர்களுடைய படையை களமிறக்கி, கண்ணீர்ப்புகை வாகனம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகிக்கும் வாகனம் என்பவற்றை கொண்டுவந்து நீதிமன்றத்தின் தடை உத்தரவின்படி உங்களை இந்த இடத்தில் இருக்க விட மாட்டோம் என்று கூறினர்.
இதன் காரணமாகத்தான், எங்களுடைய மக்கள், நேற்றையதினம் அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் நிற்கலாம் என்றால் ஏன் நாங்கள் நிற்க முடியாது என தெரிவித்து எதிர்ப்பு வெளியிட்டனர்.
சர்வதேச நாடுகளுக்கு, இந்த நாட்டில் சிங்களவர்களுக்கு ஒரு நீதி தமிழர்களுக்கு ஒரு நீதி என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத்தான் நாங்கள் இன்று வீதிக்கு குறுக்கே வந்து நின்று எதிர்ப்பை வெளியிட்டு வருவதற்கு நாங்கள் தீர்மானித்தோம்.
உண்மையில் எங்களுடைய நோக்கம் அதிபரின் நிகழ்வை குழப்புவது அல்ல. ஆனால் நாங்கள் நினைத்திருந்தால் ஒரு ஐந்து பத்து நிமிடங்களுக்குள் அதனை செய்திருக்க முடியும்.
நாங்கள் கூட இந்த அழுத்தத்தை வெளியிடுவதற்கு காரணம், காவல்துறையினரை மீறி நாங்கள் செல்ல முற்பட்டால், அவர்கள் எங்களை அடிக்கிறார்கள், தொடக் கூடாத இடங்களை தொடுகின்றார்கள், கொலை முயற்சி செய்கின்றார்கள், காலால் எட்டி உதைக்கின்றார்கள்.
ஆனால் பிக்கு வந்தால் இவை அனைத்தும் வேறு மாதிரி நடக்கின்றது. பிக்கு விழுந்து விட்டார் தண்ணீர் கொடுங்கள் என்று கூறுகின்றார்கள். இதுதான் இலங்கை காவல்துறையினரின் நிலைமை.
அந்த பிக்கு ஒரு பெண் ஊடகவியலாளரைக் கூட அச்சுறுத்தும் நிலையில் அதனையும் வேடிக்கைப் பார்த்த காவல்துறையினர், இன்று எங்களது மக்களின் நியாயமான போராட்டத்தை நசுக்குவதற்கு ஆயிரக்கணக்கானோர் வந்திருக்கின்றார்கள்.
இந்தநிலையில், எங்களது மயிலத்தமடு மாதவனை மேய்ச்சற் தரை விவகாரத்தில் பண்ணையாளர்களுக்கு, மாவட்ட அரசாங்க அதிபராலோ, அல்லது மாவட்டத்தின் இராஜாங்க அமைச்சராலோ தீர்வினை வழங்க முடியாது.
ஏனென்றால் இராஜாங்க அமைச்சருக்கு அவர் சிறைக்குச் செல்லாமல் தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதுதான் வேலை. எனவேதான் நாங்கள் எமக்கு நீதி கிடைக்கு வரை இந்த போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
No comments