Header Ads

'மொட்டு' ஆதரவை விலக்கினால் உடனே நாடாளுமன்றத் தேர்தல்!


இந்த அரசைத் தொடர்ந்து கொண்டு செல்ல ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்காவிட்டால் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தலை நடத்தும் நிலைப்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளார் என்று அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அமைச்சுப் பதவிகளை வழங்குவதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று பொதுஜன பெரமுனவின் உயர்மட்டத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.

ஆனால், மக்கள் கடும் நெருக்கடியில் இருக்கும் வேளையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் மக்களின் பணத்தை வீணடிக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கு ஜனாதிபதி பதில் அளித்துள்ளார்.

இதற்குப் பொதுஜன பெரமுனவின் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட தலைவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க வேண்டும் என்று கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ மற்றும் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். எனினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்குக் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தார்.

இம்முறையும் அமைச்சரவை மாற்றத்தின் போது ஜனாதிபதி தமது கோரிக்கைகளை நிராகரித்துள்ளதால் பொதுஜன பெரமுனவின் தலைமை ஜனாதிபதி மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளது என்று அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்த அரசைத் தொடர்ந்து கொண்டு செல்ல ஜனாதிபதிக்குப் பொதுஜன பெரமுன ஆதரவளிக்காவிட்டால் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தலை நடத்தும் நிலைப்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளார் என்றும் தரப்புச் செய்திகள் மேலும் தெரிவித்தன. 

No comments

Powered by Blogger.