Header Ads

ஹமாஸ் மீது அமெரிக்கா பொருளாதார தடை


ஹமாஸ் அமைப்பு, பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் குழு மற்றும் ஈரானின் புரட்சிகர படை மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. 

ஹமாஸ் மீது அமெரிக்கா விதிக்கும் இரண்டாவது சுற்று தடை இது. ஹமாஸ் முதலீடு செய்துள்ள சொத்துகளையும், ஹமாஸுடன் இணைந்த நிறுவனங்களையும் முடக்கும் விதமாக இந்த பொருளாதார தடைகள் விதிக்கப்படுகிறது என அமெரிக்க கருவூலத் துறை அறிவித்துள்ளது. 

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஹமாஸ் மற்றும் பிற போராளிக் குழுக்களை ஈரான் ஆதரிக்கிறது என்பது அமெரிக்காவின் நீண்ட காலக் குற்றச்சாட்டாக உள்ளது. 

அதன்படி, இந்தக் குழுக்களுக்கு ஈரான் நிதியுதவி அளிப்பதை தடுக்கும் நோக்கத்துடன் ஹமாஸ் மற்றும் ஈரானின் புரட்சிகர படை மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.

இதனிடையே, காசா நகரின் புறநகர் பகுதியான ஷிஜாயாவில் உள்ள ஹமாஸ் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் விமான தாக்குதல் நடத்தியது. பீரங்கி குண்டுகளை வீசியும் தாக்கியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

அத்துடன், காசாவில் தரைவழித் தாக்குதல் நடத்த ஒத்திகை பார்த்த நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்வில் உள்ள ஒரு கட்டடத்தில் ஏவுகணை ஒன்று தாக்கியதில் மூன்று பேர் வரை காயமடைந்துள்ளனர். இந்த ஏவுகணை தாக்குதலுக்கு ஹமாஸ் பொறுப்பேற்றுள்ளது. காசா மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என ஹமாஸ் தெரிவித்துள்ளது. அரைமணி நேரத்தில் பல ஏவுகணைகள் வீசப்பட்டன என்றும் தெரிவித்துள்ளது. 

அதேநேரம், டெல் அவிவ் நோக்கி ஏவப்பட்ட எட்டு ஏவுகணைகளை இஸ்ரேல் இடைமறித்து அழித்தது என அந்த நாட்டின் ஊடகம் 12 செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, காசாவில் எரிபொருள் பற்றாக்குறையால் ஆயிரக்கணக்கான நோயாளிகள் ஆபத்தில் உள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. காசாவில் உள்ள 12 பெரிய மருத்துவமனைகள் இயங்குவதற்கு தினமும் குறைந்தது 94 ஆயிரம்  லிட்டர் எரிபொருள் தேவைப்படுகிறது. ஆனால், இங்கு எரிபொருள் மற்றும் மருத்துவப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் டயாலிசிஸ் தேவைப்படும் 1,000 நோயாளிகள், 2,000 புற்றுநோயாளிகள், தீவிர சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் ஆபத்தில் உள்ளனர்.

பாலஸ்தீனிய பிராந்தியத்துக்கான உலக சுகாதார நிறுவன பிரதிநிதி ரிச்சர்ட் பீபர்கார்ன் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், எரிபொருள் பற்றாக்குறையால் தாய் மற்றும் பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியம் மோசமடைந்து வருகிறது. உலக நாடுகள் காசாவுக்கு எரிபொருள், உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவப் பொருட்களை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனிடையே, உணவு பற்றாக்குறையும் நிலவுவதால் காசா மக்கள் பசியால் வாடுகின்றனர் என உலக உணவுத் திட்டத்தின் செய்தித் தொடர்பாளர் அபீர் எடெஃபா வேதனை தெரிவித்துள்ளார்.

காசா அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறையால் போராடி வருகிறது. உணவும் தண்ணீரும் நிறைவடைந்து வருகின்றன. குறிப்பாக காசாவுக்கு வெளியே, மேற்குக் கரையில் ஒவ்வொரு நாளும் நிலைமைகள் மோசமடைந்து வருகின்றன. தூய்மைப் பணிகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால் கொலரா உள்ளிட்ட நோய் தொற்று பரவும் அபாயமும் காசாவில் நிலவி வருகிறது என அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.  

No comments

Powered by Blogger.