கண்நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானம்
மாணவர்களிடையே பரவி வரும் கண்நோயை கட்டுப்படுத்துவதற்கு, சகல பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு தெளிவுப்படுத்தல்களை வழங்கவுள்ளது.
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் சில இடங்களில் உள்ள பாடசாலைகளின் மாணவர்கள் மத்தியில் இந்த கண்நோய் அதிகளவில் பரவி வருகின்றது.
இதனை கருத்திற்கொண்டு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு குறித்த நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுக்கு கண்கள் சிவத்தல், தொடர்ந்தும் கண்ணீர் வெளியேறுதல், கண்களில் அரிப்பு ஏற்படுதல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களிடத்தில், 5 நாட்களுக்கு மேலாக இவ்வாறான நோய் அறிகுறிகள் நீடிக்குமாயின், உடனடியாக அவர்களை வைத்தியர் ஒருவரிடம் அழைத்துச் செல்லுமாறு பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கண்நோய் தொற்றை குறைப்பதற்காக அடிக்கடி கைகளைச் சுத்தம் செய்தல் மற்றும் கண்களைத் தொடுவதை தவிர்த்தல் உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகளை உரிய வகையில் பின்பற்றுமாறும் சுகாதாரத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
No comments