வாகனங்களின் இறக்குமதித்தடைகள் குறித்து விசேட அவதானம்
நேர்மறையான பொருளாதார முன்னேற்றத்தை நோக்கிச் செல்வதே அரசாங்கத்தின் இலக்காகும். அதன் அடிப்படையில் லொறிகள், பேருந்துகள் மற்றும் தொழிற்துறைசார் வாகனங்களின் இறக்குமதித்தடைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதாரத்தை ஸ்திரமடையச் செய்யும் இலக்குடன் நாம் செயற்பட்டு வருகின்ற நிலையில், சில பொருட்களுக்கு இறக்குமதித் தடை விதிக்கப்பட்டுள்ளமையால் அதில் சிக்கல்கள் காணப்படுகின்றன.
இதனால் சர்வதேசத்துடனான வர்த்தக நடவடிக்கைகளிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டன. இது தேசிய உற்பத்தியாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது.
ஏற்றுமதி உற்பத்திக்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய முடியாவிட்டால், ஏற்றுமதி வருமானமும் பாதிக்கப்படும். இதனை அடிப்படையாகக் கொண்டு வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்குமான இறக்குமதித்தடைகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய வாகன இறக்குமதி விவகாரத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் கடந்த இரு அமைச்சரவை கூட்டத்திலும் அவதானம் செலுத்தப்பட்டது.
அதாவது எந்தவகையான வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.
லொறி, பேருந்து , தொழிற்துறைக்கு தேவையான வாகனங்கள் உள்ளிட்டவற்றின் இறக்குமதி தொடர்பான கொள்கையை மாற்றுவது குறித்து அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள் ஊடாக 2024 இல் 1.8 - 1.9 நேர்மறை பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்கின்றோம். கொள்கை ரீதியிலான பொருளாதார வளர்ச்சியின் ஊடாக தற்போது தாங்கிக் கொள்ள முடியாத நிலைமையிலுள்ள வாழ்வாதார சுமையை குறைக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று தெரிவித்துள்ளார்,
No comments