Header Ads

ஜனாதிபதிக்கு மட்டக்களப்பில் தகுந்த வரவேற்பு கிடைக்கும் - சாணக்கியன் எம்.பி. எச்சரிக்கை


பண்ணையாளர்களின் பிரச்சினையை தீர்க்காமல் ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வருவாராக இருந்தால், அங்கே அவருக்கு தகுந்த வரவேற்பு கிடைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற துறைமுக அதிகார சபை மற்றும் சிவில் விமான சேவைகள் தொடர்பான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது சாணக்கியன் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்.

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஜனாதிபதி மட்டக்களப்பு வரவுள்ளார். இந்நிலையில் மட்டக்களப்பு மயிலத்தமடுவில் பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக 22 நாட்களாக போராடி வருகின்றனர். தங்களுடைய மேய்ச்சல் தரை பிரதேசங்களை அபகரித்து, ஏனைய மாவட்டங்களில் இருந்து அமைச்சர்கள் சிலரின் வழிகாட்டல்களில் புதிதாக விவசாயம் செய்ய வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வேண்டுமென்றால் அவர்கள் வேறு எங்காவது அதனை செய்யலாம். இதற்காக தங்களின் மேய்ச்சல் தரைகளை பயன்படுத்த முடியாது. அங்கு வெளி மாவட்டங்களில் இருந்து வந்து விவசாயம் செய்தால் அங்குள்ள பண்ணையாளர்கள் தமது மாடுகளை எங்கு கொண்டு செல்வது.

அத்துடன், பண்ணையாளர்களின் கோரிக்கையை நிவர்த்தி செய்வதாக ஜனாதிபதி வாய்மூலம் வாக்குறுதி வழங்கியுள்ள போதும், மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரையில் போராட்டம் தொடரும். இல்லாவிட்டால் இதன் விளைவுகளை மட்டக்களப்பு வரும் போது ஜனாதிபதி பார்க்கக்கூடியதாக இருக்கும். ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வர முதல் இதனை தீர்க்காவிட்டால் ஜனாதிபதிக்கு வழங்க வேண்டிய கெளரவத்தை நாங்கள் வழங்குவோம் என்று தெரிவித்துள்ளார்.



No comments

Powered by Blogger.