அமைச்சரவை மாற்றத்துக்கு எதிராக மொட்டுக் கட்சி எதிர்ப்பு
அமைச்சரவை மாற்றத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தில் தவறான முடிவை எடுத்துள்ளார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து கெஹலிய ரம்புக்வெலவை மாற்றியது முற்றிலும் தவறான விடயம் என்றும அவர் தெரிவித்துள்ளார்.
கெஹலியவுக்கு எதிராகப் பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் சில நடவடிக்கைகளை எடுப்பது சரியானதா என்பது குறித்து ஜனாதிபதி சிந்தித்திருக்க வேண்டும் என்றும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரணவை நியமிப்பது குறித்த கட்சியின் அதிருப்தியை ஏற்கனவே ஜனாதிபதிக்குத் தெரிவித்துள்ளோம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்கியமை எமக்கு அதிருப்தியளிக்கின்றது.
இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் அதிகளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள்.
இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைச்சரவையிலிருந்து நீக்கிவிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு அதனை வழங்குவது தவறான முடிவு. இதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
No comments