Header Ads

செல்வராசா கஜேந்திரன் மீது தாக்குதல்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீது சிங்கள இனவெறியர்கள் நடத்தியுள்ள கொடூரத்தாக்குதலை கண்டிக்கிறோம் என விடுதலைச் சிறுத்தைகள் தெரிவித்துள்ளது.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு துணைப்பொதுச்செயலாளரால் இந்த கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,  நாடாளுமன்ற உறுப்பினருக்கே பாதுகாப்பற்ற நாடாக இலங்கை தொடருகிறது. இந்தியாவில் இந்துத்துவ மதவெறியர்கள் எப்படி பொலிஸார் இருக்கும் போதே சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்துவார்களோ அப்படி கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளது சிங்கள இனவெறிக்கும்பல்.

தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டின் நினைவையொட்டி, திருகோணமலையிலிருந்து செப்டம்பர் 15 முதல் எழுச்சி ஊர்தி பயணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்து.

ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பகுதிகளில் தியாக தீபம் திலீபன் நினைவை போற்றும் வகையில் இம்மாதிரியான ஊர்தி பயணத்தை ஒருங்கிணைப்பது வழக்கம்.

முறையான முன் அனுமதியோடு தான் நடத்தப்படுகிறது. ஆனாலும், சிங்கள இனவெறியர்கள் இத்தாக்குதலை தொடுத்திருப்பது கண்டனத்துக்குரியதாகும். இப்படி தாக்குதலை நடத்தி தமிழீழ உறவுகளை அச்சுறுத்த முடியாது.

நாடாளுமன்ற உறுப்பினர் மீதான இத்தாக்குதலை விடுதலைச்சிறுத்தைகள் ஆகிய நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இன்னமும் தொடரும் இனவெறிப்போக்குக்கு எந்த தீர்வும் காணாமல், சிங்கள இனவெறி அரசுக்கு ஒத்துழைக்கும் இந்திய ஒன்றிய அரசின் போக்கும் சிங்கள பவுத்த இனவாதிகளுக்கு துணைபோவதாகவே அமைந்துள்ளது.

தொடரும் இத்தகைய இனவெறித்தாக்குதலை தடுத்து நிறுத்தும் பொறுப்பு சர்வதேசத்துக்கும் உண்டு. ஆகவே,இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு தீர்வு காண இந்தியாவும் தலையிட வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  



No comments

Powered by Blogger.