புத்தவிகாரைகளில் மனித எச்சங்கள் - செல்வம் எம்.பிக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு என்கிறார் ஶ்ரீரங்கேஸ்வரன்
கடந்த யுத்த காலங்களில் அரச படையினருடன் குழுக்களாக இணைந்து செயற்பட்டவர்களுக்கு சில சமயங்களில் புத்தவிகாரைகள் அமைக்கப்படும் இடங்களில் மனித எச்சங்கள் இருப்பது தெரிந்திருக்க வாய்ப்புள்ளது என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனை சுட்டிக்காட்டினார்.
செல்வம் அடைக்கலநாதன் மனித எச்சங்கள் இருப்பதை மறைப்பதற்காகவே புத்த கோயில் அமைக்கப்படுகின்றன என கூறுவது அவரது அரசியல் கபடத்தனமாகவே பார்க்கப்படுகின்றது.
வடக்கு கிழக்கில் ஆயிரம் புத்த விகாரைகள் அமைப்பதற்கு ஆதரவளித்து வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அன்றைய நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மனித எச்சங்கள் இருப்பதை மறைப்பதற்காகவே புத்த கோயில் அமைக்கப்படுவதாக தெரிவித்து தனது அரசியல் கபடத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழும் பணி நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய அரசினால் நிதி ஒதுக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் செல்வம் அடைக்கலநாதன் தனது அறிக்கையில் வடக்கு கிழக்கில் மனித உடல் எச்சங்கள் காணப்படுவதை மறைப்பதற்காகவே புத்தவிகாரைகள் அமைக்கப்படுவதாக கூறியுள்ளார்.
உண்மையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கில் ஆயிரம் விகாரைகள் கட்டுவேன் என சஜித் பிரேமதாச தேர்தல் விஞ்ஞாபனத்தில் பகிரங்கமாக குறிப்பிட்டிருந்த போது வடக்கு கிழக்கு மக்களை சஜித்துக்கு வாக்களிக்குமாறு தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்ட கூட்டமைப்பினர் 2024 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக அண்மிப்பதை கருத்தில்கொண்டு இவ்வாறான மக்களை ஏமாற்றுகின்ற சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன், யுத்த காலங்களில் அரச படையினருடன் குழுக்களாக இணைந்து செயற்பட்ட இவர்களுக்கு சில சமயங்களில் புத்தவிகாரைகள் அமைக்கப்படும் இடங்களில் மனித எச்சங்கள் இருப்பது நன்கு அறிந்திருக்க கூடும். ஆதலால்தான் அவருடைய அறிக்கை அதை புடம்போட்டு காட்டுவதாக கருதவும் வாய்ப்பு உண்டு எனவும்” அவர் தெரிவித்தார்.
No comments