சட்டமன்றப் பேரவையில் அநாகரிக செயல்!
1989 ஆண்டு அன்று தமிழக சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற நாகரிகமற்ற செயலை நாடகம் என்று சொல்வது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டமன்றப் பேரவையில் ஜெயலலிதா அவமதிக்கப்பட்டதை ‘நாடகம்’ என்று சொல்லும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றேன்.
மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மீது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மகாபாரதத்தில் திரௌபதிக்கு இழைக்கப்பட்ட அநீதியை பற்றி பேசியதை சுட்டிக்காட்டி, பெண்கள் எங்கு இழிவு படுத்தப்பட்டாலும் அதனை கடுமையாக ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதில் அரசியல் இருக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.
மேலும், கனிமொழிக்கும், நாடாளுமன்றத்திற்கும் தமிழக சட்டமன்றப் பேரவையில் நடந்த ஒரே ஒரு நிகழ்வை நினைவு படுத்துவதாகத் தெரிவித்து, அந்த புனிதமான சபையில் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா தி.மு.க.வினரால் அவமானப் படுத்தப்பட்டதையும், அவருடைய புடவை இழுக்கப்பட்டதையும், தமிழக சட்டமன்றப் பேரவைக்கு வந்தால் முதல்வராகத்தான் திரும்ப வருவேன் என்று ஜெயலலிதா சபதம் எடுத்ததையும், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் முதல்வராக பொறுப்பேற்றதையும் குறிப்பிட்டார்.
இது உண்மையிலே நடைபெற்ற சம்பவம். ஆனால், இந்தச் சம்பவம் நாடகம் என்று தி.மு.க. உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கூறினர். இது குறித்து ஒரு நாளிதழுக்கு பேட்டியளித்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், இதுபோன்ற நிகழ்வு தமிழக சட்டமன்றப் பேரவையில் நிகழவில்லை என்றும், அன்று சட்டமன்றத்தில் இருந்தவர்களுக்கு இது ஒரு நாடகம் என்பது தெரியும் என்றும் பேட்டியளித்து இருக்கிறார். நடந்த சம்பவத்தை, நடந்த உண்மையை திரித்துப் பேசுவது கடும் கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments