Header Ads

அண்ணாமலை நடைபயணத்தில் நடிகர் விஜய் ரசிகர்கள் பங்கேற்பு?


தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில், மதுரையில் அவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியோடு சிலர் பங்கேற்றனர். இது தொடர்பாக புஸ்சி ஆனந்த் விளக்கம் கொடுத்துள்ளார்.

ராமேசுவரத்தில் கடந்த மாதம் 28 ஆம் திகதி தொடங்கிய அண்ணாமலையின் நடைபயணம் சென்னையில் நிறைவடைகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இராமேசுவரத்தில் இந்த நடைபயணத்தை தொடங்கி வைத்தார். தொடர்ச்சியாக 6 மாதங்கள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கிறார் அண்ணாமலை. ஜனவரி 11 ஆம் திகதி பயணத்தை முடிவு செய்கிறார். தற்போது அவரது பயணம் மதுரையை அடைந்துள்ளது.

இந்த சூழலில் நேற்று மதுரையில் அண்ணாமலையின் ‘என் மண், என் மக்கள்’ நிகழ்வில் விஜய் மக்கள் இயக்க கொடியுடன் சிலர் பங்கேற்றனர். அது தொடர்பாக படங்கள் மற்றும் காணொளிகள்  சமூக வலைதளத்தில் பரவின. இந்த சூழலில் இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் விளக்கம் கொடுத்துள்ளார்.

தளபதி விஜய் மக்கள் இயக்க கொடியோடு மாற்றுக் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக செய்திகளில் வெளியான நபர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை. மற்றும் அவர்களுக்கும் தளபதி மக்கள் இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என புஸ்சி ஆனந்த் தனது ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் சமூக நற்பணிகளை அவரது மக்கள் இயக்க நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்வு சென்னையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டி இருந்தார்.



No comments

Powered by Blogger.