நாடாளுமன்றத்தில் அமைதியின்மை: மலையக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்
மாத்தளை – ரத்வத்தை பகுதியில் சில குடும்பங்கள் தோட்ட அதிகாரியினால் வெளியேற்றப்பட்டமைக்கு மலையக எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் இன்று எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த தோட்ட அதிகாரி உடன் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் சபையில், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாத்தளை-எல்கடுவ ரத்வத்தை உள்ள அரச தோட்டமொன்றைச் சேர்ந்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 14 பேரை தோட்ட பிரதி முகாமையாளர் விரட்டி அவர்களின் வீடுகளை இடித்த சம்பவம் காரணமாக நாடாளுமன்றத்தில் கடும் அமளி இன்று ஏற்பட்டது.
சுமார் ஒரு மணி நேரம் இந்தப் போராட்டம் நடைபெற்றதால், சபையின் அலுவல்களைக் கட்டுப்படுத்த சபாநாயகர் கடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோகினி குமாரி விஜேரத்ன, வடிவேல் சுரேஸ், எஸ்.ராதாகிருஷ்ணன், மனோ கணேசன், எஸ்.வேலு குமார், கின்ஸ் நெல்சன், சமிந்த விஜேசிறி, காவிந்த ஜயவர்தன உள்ளிட்டவர்கள் குழுவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரான வடிவேல் சுரேஷ் கறுப்பு உடை அணிந்து நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
மேலும் தோட்ட அதிகாரியின் அடாவடித்தனத்தை வெளிக்காட்டும் காணொளி ஆதாரத்தையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
No comments