Header Ads

ராகுல் காந்தியின் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

 


பிரதமர் மோடி பெயர் அவதூறு வழக்கில் காங்கிரஸின் முக்கியத் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 7 ஆம் திகதி நிராகரித்தது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டைனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

முன்னதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, ‘‘எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்’’ என்று கேள்வி எழுப்பினார். அவரது பேச்சு மோடி சமூகத்தினரை இழிவுப்படுத்துவதாக அமைந்துள்ளதாக கூறி குஜராத் பாஜக சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.