பைடனுக்கு கொலை மிரட்டல்: சந்தேகநபர் ட்ரம்பின் ஆதரவாளர்!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்களும், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளங்களில் கடுமையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
அதில் அமெரிக்காவின் உடா மாநிலத்தை சேர்ந்த க்ரெய்க் ராபர்ட்ஸன் என்ற ட்ரம்பின் ஆதரவாளர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் ஜனாதிபதி பைடனை குறித்து தீவிரமான கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.
பைடன் தொடர்பில் கடந்த 2022ம் ஆண்டு இவர் வெளியிட்ட பதிவு ஒன்றில் ஜனாதிபதியை கொலை செய்வதற்கான நேரம் வந்துவிட்டது, முதலில் ஜோ, பிறகு கமலா என குறிப்பிட்டிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பிற்கு எதிராக கிரிமினல் வழக்கு ஒன்றை தொடர்ந்த மன்ஹாட்டன் மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஆல்வின் ப்ராக் என்பவரையும் கொல்லப் போவதாக கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து ஜனாதிபதி ஜோ பைடன் உடா மாநிலத்திற்கு வருகை தருவதால் தனது எம்24 ஸ்னைப்பர் வகை துப்பாக்கியை உபயோகப்படுத்தும் காலம் வந்து விட்டது என்றும் குறித்த நபர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த பதிவில் பலவகை துப்பாக்கிகளையும் அவர் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் உடா மாநிலத்தில், ப்ரோவோ எனும் இடத்தில் உள்ள கொலை மிரட்டல் விடுத்த வீட்டிற்கு தேடுதல் மற்றும் கைது நடவடிக்கைகளுடன் அமெரிக்க மத்திய புலனாய்வு அதிகாரிகள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குறித்த கைது நடவடிக்கையில் க்ரெய்க் ராபர்ட்ஸன் சுட்டுக்கொல்லப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் க்ரெய்க் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான முழு விவரங்களையும் அதிகாரப்பூர்வமாக அமெரிக்க அரசு இன்னும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments