மதுரையில் முதன்முறையாக பேரீச்சம் பழம் பயிர்செய்கை!
இந்தியாவில் மதுரையில் முதல்முறையாக பேரீச்சம் பழம் பயிர்செய்கையில் ஈடுப்பட்டு விவசாயி ஒருவர் பாரிய விளைச்சளை பெற்றுள்ளார்.
மதுரை சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்தவர் 47 வயதான மு.மூவேந்திரன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து, பின்னர் விருப்ப ஓய்வு பெற்று விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மதுரை - அலங்கா நல்லூர் அருகே இடையபட்டியில் தனக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் பேரீச்சம் பழம் பயிரிட்டு 4 ஆண்டுகளின் பின், தற்போது அறுவடை செய்யத் ஆரம்பித்துள்ளார்.
இது தொடர்பில் குறித்த மு.மூவேந்திரன் தெரிவிக்கையில் ,
ஓய்வுக் காலத்தில் நிரந்தர வருவாய் ஈட்டும் வகையில் அதிக பராமரிப்பில்லாத விவசாயம் செய்ய முடிவெடுத்தேன். வளைகுடா நாடுகளில் வேலை பார்த்த எனது சகோதரர் ஒருவர் கொடுத்த ஆலோசனையின் பேரில் பேரீச்சம் பழம் பயிர் செய்ய முடிவு செய்தேன்.
திருப்பூர் மாவட்டம், அவினாசியில் திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்பட்ட பேரீட்சை மரக்கன்றை தலா 5 ஆயிரம் ரூபா வீதம் 95 மரக்கன்றுகள் வாங்கி நாட்டினேன். 25 இற்கு 25 அடி இடைவெளியில் நாட்டியுள்ளேன்.
ஆடு, மாட்டுச்சாணம் என இயற்கை உரங்களை மட்டுமே இட்டு வளர்த்து வருகிறேன். தற்போது மூன்றரை ஆண்டுகள் முடிந்த நிலையில் பேரீட்சை நன்கு விளைந்து அறுவடைக்கு வந்துள்ளது. ஆண் மரங்கள் 5, பெண் மரக்கன்றுகள் 90 நாட்டியுள்ளேன்.
கிளிகள் மற்றும் பறவைகளால் சேதம் ஏற்படாமல் இருக்க வலைகளை போர்த்தி பாதுகாத்துள்ளேன். தோட்டக் கலைத்துறையினர் நீர்ப்பாசனம் அமைத்துக் கொடுத்தத மிகவும் உதவியாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.
பேரீட்சை ஒரு வெப்ப மண்டல பயிர். இது ஈராக், ஈரான், சவுதி அரேபியா, எகிப்து, அல்ஜீரியா நாடுகளிலும் இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களிலும் அதிக அளவு விளைச்சளை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments