Header Ads

எதிர்க் கட்சிகளுக்கு பயம்: கேலி செய்கிறார் பிரதமர் மோடி


நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சிகள் பயத்தில் வெளிநடப்பு செய்தன என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.கவினர் மத்தியில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா பிரேரணையை  நாம் தோற்கடித்தோம். கூடவே, அவர்களின் கேள்விகளுக்கு, தேசத்தில் எதிர்மறை எண்ணங்களை விதைத்து வந்தவர்களுக்குத் தகுந்த பதிலடி கொடுத்தோம். ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலிருந்து பாதியிலேயே வெளிநடப்புச் செய்தனர். உண்மையில் அவர்கள் நம்பிக்கை இல்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பங்கேற்க பயந்துபோய் வெளிநடப்பு செய்தனர் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது பிரதமர் மோடி இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நீண்ட உரையாற்றினார். அதில் 90 நிமிடங்கள் வரை பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் பற்றி எதுவுமே பேசவில்லை. இதனால், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. அதன் பின்னர் பிரதமர் மோடி மணிப்பூர் பற்றி பேசினார். அதன் பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் நம்பிக்கை இல்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலின்போது இடம்பெற்ற வன்முறைகள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியிருந்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், 

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலின்போது பா.ஜ.க. தொண்டர்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்கினர். வாக்குச்சாவடிகளை கைப்பற்றினர். தேர்தலில் போட்டியிட பா.ஜ.கவைச் சேர்ந்த ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யக் கூடாது என்ற எண்ணத்தோடு அவர்கள் நம் கட்சியினரை மிரட்டினர். இருந்தும் பா.ஜ.கவினர் களம் கண்டனர். அதனால் வன்முறையில் அவர்கள் இறங்கினர். மேற்கு வங்கத்தில் இப்படியான அரசியல்தான் நடக்கிறது. இருப்பினும் அத்தனை அச்சுறுத்தலைகளையும் மீறி தேர்தலில் வென்ற பா.ஜ.கவினரை நான் வாழ்த்துகிறேன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.



No comments

Powered by Blogger.