கடலில் மூழ்கி சிறுவர்கள் மூவர் உயிரிழப்பு: முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே நவ்வலடி கிராமத்தில் கடலில் குளிக்கச் சென்ற மூன்று மாணவர்கள் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடற்கரை கிராமமான நவ்வலடியைச் சேர்ந்த மகாலிங்கம் முகேஷ் (வயது 13), இசக்கியப்பன் ராகுல் (வயது 12) , வள்ளிமுத்து ஆகாஸ் (வயது 13) மற்றும் பிரகாஷ் ஆகிய நான்கு பேரும் அங்குள்ள தனியார் பாடசாலையில் படித்து வந்தனர். நேற்று முன்தினம் மாலையில் இவர்கள் கடலில் குளிக்கச் சென்றுள்ளனர்.
எதிர்பாராதவிதமாக 4 பேரும் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர். அதில் பிரகாஷ் மட்டும் தத்தளித்து கரைக்கு வந்து சேர்ந்தான். ஏனைய மூவரும் கடலில் மூழ்கி மாயமானார்கள். தப்பிவந்த பிரகாஷ் ஊருக்குள் வந்து விவரத்தை கூறியதும், அப்பகுதி மீனவர்கள் கடலில் 3 மாணவர்களையும் தேடினர். உவரி பொலிஸார், தீயணைப்பு படையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினரும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு முழுக்க தேடும் பணி நடைபெற்றது.
இந்த நிலையில், நேற்று அதிகாலையில் 3 மாணவர்களின் சடலங்கள் கோடாவிளை அருகே கரை ஒதுங்கின. இந்த சம்பவத்தால் நவ்வலடி கிராமமே சோகத்தில் மூழ்கியது. அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை உள்ளிட்டோர் 3 மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபா நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். நிவாரணத் தொகையை சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு நேற்று மாலை வழங்கியுள்ளார்.
No comments