சமையல் எரிவாயுவின் விலை 200 ரூபாவால் குறைப்பு
வீட்டு உபயோக சமையல் எரிவாயுவின் விலை 200 ரூபாவால் குறைக்கப்படுகிறது என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து டிடெல்லியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், வீட்டு உபயோக சமையல் எரிவாயு பயன்படுத்தும் அனைத்துப் பயனாளிகளும் பயன் பெறும் வகையில் எரிவாயுவின் விலையை 200 ரூபாவால் குறைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி முடிவெடுத்துள்ளார்.
ரக்ஷா பந்தனை முன்னிட்டு நமது நாட்டின் பெண்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பரிசு இது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் தற்போது 9.6 கோடி பயனாளிகள் உள்ளனர். மேலும், 75 லட்சம் பயனாளிகளைச் சேர்க்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. பிரதமரின் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு ஏற்கனவே 200 ரூபா குறைவாக சமையல் எரிவாயு விநியோகிக்கப்படுகிறது. அவர்களுக்கு தற்போது மேலும், 200 ரூபா குறையும். அந்த வகையில், பிரதமரின் உஜ்வாலா திட்ட எரிவாயு பயனாளிகளுக்கு எரிவாயுவின் விலை 400 ரூபாவால் குறையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த அறிவிப்பை அடுத்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியை அதிகப்படுத்தக்கூடிய விழா ரக்ஷா பந்தன். சமையல் எரிவாயு விலைக் குறைப்பு எனது குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு சகோதரிக்கும் கூடுதல் சவுகரியத்தைத் தரும். அவர்களது வாழ்க்கை மேலும் எளிதாகும். எனது ஒவ்வொரு சகோதரியும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதையே கடவுளிடம் நான் வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments