Header Ads

13 ஆவது திருத்தம் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை: பிள்ளையான் கூறுகிறார்


13 ஆவது திருத்தச் சட்டம் ஊடாக வடக்கு - கிழக்கு மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அர்ப்பணிப்புடன் உள்ளார் என்று கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கடும்போக்கு அரசியல்வாதிகளின் கருத்துக்களால் தென்னிலங்கை மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த சிவநேசதுரை சந்திரகாந்தன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த முயற்சி எடுத்து வருகின்றார்.

நாடாளுமன்றத்தில் வடக்கு மற்றும் கிழக்கு, மக்கள் பிரதிநிதிகளிடம் 13 ஆவது அரசமைப்பை நடைமுறைப்படுத்துவது குறித்து கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

அண்மையில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளையும் அழைத்து சர்வகட்சி மாநாடு ஒன்றையும் நடத்தினார்.

ராஜீவ் - ஜே. ஆர் ஜயவர்தன ஆகியோர் அன்று 13 ஆவது திருத்த சட்டமூலத்தை கொண்டு வந்தபோது அன்றைய அமைச்சரவையில் ஒரு அமைச்சராக அங்கம் வகித்த தற்போதைய ஜனாதிபதி, இந்த அதிகாரப் பகிர்வுப் பிரச்சினைக்கு நிரந்தமான தீர்வை முன்வைப்பார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கின்றது.

அதிகாரப் பகிர்வின் மூலம் நாடு துண்டாடப்படும் என்று தெற்கில் உள்ள அரசியல் தலைவர்கள் கருத்துக்களை வெளியிடும் அதேநேரம், முதலில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறும், எமக்கு முழுமையான அதிகாரப் பகிர்வு மாத்திரமே வேண்டும் என்றும் வடக்கு - கிழக்கு அரசியல் தலைவர்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர். இவை இரண்டுமே இரு தீவிர நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றது.

13 ஆவது அரசமைப்பை நடைமுறைப்படுத்துவதில் மிதமான போக்குடன் இருதரப்பும் சுமூகமான கலந்துரையாடல்களை நடத்தி இப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதே இந்நாட்டின் முன்னேற்றத்துக்கு உகந்தது.

13 ஆவது அரசமைப்பின் ஊடாக வடக்கு - கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் உள்ளார். ஆனால், இதில் பொலிஸ் அதிகாரத்தைப் பகிர்வதில் மட்டும் சில சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றுக்கும் தீர்வு காண முடியும் என்று ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளைப் போன்றே தெற்கில் உள்ள கடும்போக்குவாத சில சிங்களத் தலைவர்கள் வெளியிடும் தீவிரக் கருத்துக்களால் தெற்கில் உள்ள சிங்கள மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.  

No comments

Powered by Blogger.