ஊடகவியலாளர் தரிந்து பிணையில் விடுவிப்பு
கைது செய்யப்பட்ட இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் தரிந்து உடுவரகெதர இன்று மாலை பிணையில் விடுவிக்கப்பட்டார்.
சட்டவிரோத கூட்டமொன்றில் கலந்துகொண்டமை, அரச ஊழியருக்கு அழுத்தம் விடுத்தமை உள்ளிட்ட குற்றவியல் குற்றச்சாட்டுகளின் கீழ் தரிந்து உடுவரகெதர நேற்று கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து இன்று முற்பகல் அவர் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியின் பரிந்துரையின் அடிப்படையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தரிந்து உடுவரகெதரவை பார்வையிடுவதற்கு புதுக்கடை பதில் நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று பிற்பகல் அங்கு சென்றிருந்தார்.
இதன்போதே, தரிந்து உடுவரகெதர இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இதேவேளை, ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர கைது செய்யப்பட்டமை மற்றும் தாக்கப்பட்டமைக்கு உள்நாட்டு, வெளிநாட்டு ஊடக அமைப்புகள் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளன.
அச்சமின்றி செய்திகளை அறிக்கையிடுதலுக்கு உள்ள உரிமை தொடர்பில் 1981 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஸ்தாபிக்கப்பட்ட ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பினரும் இந்த தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
No comments