தமிழ் இளைஞரை விடுவித்தால் ஆனந்தபவனிற்கு அழைத்துச்செல்வேன்; சரத் பொன்சேகா
என்னை கொலை செய்ய தமிழ் இளைஞர் விடுவிக்கப்பட்டால் ஆனந்தபவனிற்கு அழைத்துச்சென்று தோசை வாங்கிக்கொடுப்பேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் பேசியபோது அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
என்னை கொலை செய்ய இராணுவ தலைமையகத்திற்கு தற்கொலை குண்டுதாரியை அழைத்து வந்த மொரிஷ் என்பவரை விடுவித்து இந்த நடவடிக்கையை அரசு ஆரம்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் எனவும் அவர் கூறினார்.
அத்துடன் என்னை கொலை செய்ய தமிழ் இளைஞர் விடுவிக்கப்பட்டால் வெலிக்கடை சிறைச்சாலையின் வாசலிற்கே சென்று அவரை வரவேற்க தயாராக இருக்கிறேன். அவரை ஆனந்தபவனிற்கு அழைத்து சென்று இரண்டு தோசையும் வாங்கிக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைப்பேன் என தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான தமிழ் இளைஞர்களை விடுவிப்பது தவறான செயல் அல்ல. கைது செய்யப்பட்ட பலர் நீண்டகாலமாக சிறைக்குள் கழித்து விட்டனர். அவர்கள் தமது இளமைக்காலத்தை தொலைத்து விட்டனர். வெளியில் இருந்திருந்தால் அவர்களிற்கு நீண்டகாலத்தின் முன்னரே திருமணமாகி பிள்ளைகள் கூட இருந்திருப்பார்கள் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
ஆயுள்தண்டனை கைதிகளிற்கு 15 வருடங்களில் விடுதலை கிடைக்கும்.இவர்கள் அதைவிட அதிக காலம் சிறையில் இருந்து விட்டனர் என்றும், எனவே இனியும் வைராக்கியத்துடன் இருக்க வேண்டியதில்லை. அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். புனர்வாழ்வு தேவைப்படுபவர்களிற்கு ஒரு வருடம் புனர்வாழ்வளித்து விடுவிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
No comments