Header Ads

இலங்கை பல ஆண்டுகளுக்கு மீள முடியாத ஆபத்து!


கொழும்பு கடலில் மூழ்கும் பேர்ள் கப்பலில் உள்ள 300 தொன் எண்ணெய் இலங்கையின் கடல் சூழலுக்கும் உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. பேர்ள் கப்பலின் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் மேலும் ஏற்படக்கூடிய அச்சுறுத்தலை தவிர்க்கும் வகையில் சர்வதேச கடல் எல்லையை நோக்கி பேர்ள் கப்பலை இழுத்து செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

கப்பலின் பின் பகுதில் ஏற்பட்ட நீர் கசிவு கப்பல் மூழ்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. கடற்படை பேச்சாளரின் அறிவிப்பிற்கு அமைய கப்பலின் பின் பகுதி முழுமையாக கடலுக்குள் மூழ்கியுள்ள போதிலும் எண்ணெய் கசிவு இதுவரையில் ஏற்பட வில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் நிலைமை அச்சுறுத்தல் மிக்கதானதாகவே உள்ளதாக சூழலியளார்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் , பேர்ள் கப்பல் இலங்கை கடற்பரப்பில் மூழ்கினால் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விட பன்மடங்கு ஆபத்தாகிவிடும் என்பதோடு, 300 தொன் எண்ணெய் எப்போதும் அச்சுறுத்தலுக்குரியதாகும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டடிப்பட்டிருந்த எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் இலங்கை கடற்சூழலுக்கு பாரதூரமான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்தினால் வளி மற்றும் கடற்சூழல் மாசடைந்துள்ளதுடன், கப்பலிலிருந்த கொள்கலன்களில் காணப்பட்ட சிறிய பிளாஸ்டிக் துவடுகள் உள்ளிட்ட இரசாயனங்களால் கடல் வாழ் உயிரினங்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் பல கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் அவை குறித்து ஆராயும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பல ஆண்டுகளுக்கு மீள முடியாத ஆபத்து

பேர்ள் கப்பல் தீ விபத்தினால் பாரிய பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ள, இலங்கை கடற்சூழலில் குறித்த கப்பல் மூழ்குமாயின் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் பல ஆண்டுகளுக்கு நிவர்த்தி செய்ய முடியாததாகும் என்று சூழலியலாளர் கலாநிதி சந்திமா விஜேகுணவர்தன தெரிவித்தார். கப்பல் முழுமையாக கடலில் மூழ்கினால் அதில் காணப்படுகின்ற எஞ்சியுள்ள சரக்குகள், பிளாஸ்டிக் உருண்டைகள் மற்றும் இரசாயனங்களும் கடலில் கலக்கும்.

அவ்வாறு கலக்கும் பட்சத்தில் எண்ணெய் கசிவு என்பதைவிட இதனால் ஏற்படும் பாதிப்பு மிகப் பாரதூரமானதாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலமையானது அடுத்துவரும் பல ஆண்டுகளுக்கு எமது நாட்டில் கடற்றொலிழில் இது பாரிய தாக்கத்தை செலுத்தும் என்றும் கலாநிதி சந்திமா விஜேகுணவர்தன தெரிவித்தார்.

எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயம்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் 300 மெட்ரிக் தொன் எண்ணெய் காணப்படுகிறது. கப்பலின் பின் பகுதி கடலில் மூழ்கும் அபாயம் காணப்படுவதால் அதிலுள்ள எண்ணெய் கசியக்கூடிய அபாயமுள்ளதாக 'த பேர்ள் ப்ரொடெக்டர்' என்ற கடற்சூழல் பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. அவ்வாறு எண்ணெய் கசிவு ஏற்படும்பட்சத்தில் திக்கோவிட்ட தொடக்கம் நீர்கொழும்பு கெபுங்கொட பிதேசம் வரை பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் அவ் அமைப்பு எச்சரித்துள்ளது.

களப்புகளுக்கும் ஆபத்து

 கப்பல் கடலில் மூழ்கினால் மிகப் பாரதூரமான கடற்சூழல் பாதிப்பிற்கு இலங்கை முகங்கொடுக்க வேண்டியேற்படும். அரசாங்கத்தால் இதுவரையிலும் அறிவிக்கப்படாத அந்த கப்பலில் காணப்படும் அபாயம் மிக்க இரசாயனங்கள் கடலுக்குள் கலந்தால் கடற்பரப்பு பாதிக்கப்படுவதோடு கடற்தொழிலும் பாதிப்படையும். பிளாஸ்டிக் மற்றும் எண்ணெய் ஆகியவை களப்புக்களில் கலந்தால் சிறிய மீனினங்கள் மற்றும் இறால் உள்ளிட்டவை அழியக்கூடிய அபாயம் காணப்படுவதாக சூழலியலாளர் அஜந்தா பெரேரா குறிப்பிட்டார். எதிர்கால சந்ததியினருக்கும் இந்த அபாயகரமான பாதிப்பின் விளைவுகளுக்கு முகங்கொடுக்க நேரிடும். இது எமது கடற்பிராந்தியத்திற்கும் கடற்தொழிலுக்கும் இழைக்கப்பட்ட பாரிய குற்றமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடலில் சிறிய பிளாஸ்டிக் உருண்டைகள் கலப்பு

 கப்பலில் காணப்பட்ட சுமார் 3 பில்லியன் பிளாஸ்டிக் உருண்டைகள் கடலில் கலந்துள்ளதாக மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழக பேராசிரியர் சரித்த பட்டியாராச்சி கூறியுள்ளார். இலங்கையின் தெற்கு கரையோரத்தில் காணப்படும் இந்த பிளாஸ்டிக் உருண்டைகள் எதிர்வரும் நாட்களில் மேற்கு கடற்பகுதி நோக்கி நகரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். கடல்வாழ் உயிரினங்கள் பொதுவாகவே நீருடனேயே உணவையும் உட்கொள்கின்றது. இதனால் கடலில் கலந்துள்ள சிறிய பிளாஸ்டிக் உருண்டைகளை பொதுவாக அனைத்து வகையான கடல்வாழ் உயிரினங்களும் உட்கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் சிறிய மீன்கள் தொடக்கம் பெரிய மீன்கள் வரை அதனை உட்கொள்ளும் அபாயம் உள்ளது. உண்மையாகவே இலங்கையின் மீன் வளம் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகவே கூறவேண்டும். எதிர்வரும் நாட்களில் இதன் உண்மையான தாக்கத்தை அனைவராலும் உணர கூடியதாக இருக்கும் என்பது ஆய்வாளர்களின் கணிப்பாகும்.

தொடரும் கண்காணிப்புகள்

கப்பலில் ஏற்படக்கூடிய ஏனைய கசிவுகள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் பல வழிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடற்படை மற்றும் விமானப் படை உள்ளிட்ட கடலியல் ஆய்வாளர்கள் என பல் துறைசார்ந்தவர்களும் பேர்ள் கப்பலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து மதிப்பீட்டு ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக இலங்கையில் காணப்படக்கூடிய அறிய வகை கடல்வாழ் உயிரினங்கள் பலவும் கடுமையாக பாதிக்கப்படலாம் என்பதே கடலியல் ஆய்வாளரகளின் கருத்தாகின்றது. மேலும் கப்பலில் இருந்து கடலுக்கு விழுந்த சிறிய பிளாஸ்டிக் சுவடுகள் உள்ளிட்ட பொருட்கள் திருகோணமலை கடல் வரை செல்லலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது







 🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.