ரிஷாத்துக்கு கேரள நபர்களுடன் தொடர்பு?
இந்திய ஊடகங்கள் தகவல் :-
சிஐடியின் தடுப்புக்காவலில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன், இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஏற்படுத்திக்கொண்டிருந்த தொடர்புகள் தொடர்பாக இந்திய பாதுகாப்புத் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிஷாத் பதியுதீன் 2009ஆம் ஆண்டு கேரளாவின் கசராகோட் பகுதிக்குச் சென்று அங்கு சில மதத் தலைவர்களுடன் உறவை பேணியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதேபோன்று வர்த்தக அமைச்சராகவிருந்த போது ரிஷாத் பதியுதீன் 2013ஆம் ஆண்டு சென்னைக்கு விஜயம் செய்தபோதும் கேரளாவில் தொடர்பை பேணியிருந்த சம்பந்தப்பட்ட தரப்பினரை சந்தித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து இந்திய புலனாய்வுத்துறையினரும் கேரள பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ரிஷாத் பதியுதீனின் தந்தை கேரளாவின் கசராகோட் பத்னாவைச் சேர்ந்தவராவார். இவர் அப்பகுதியில் உள்ள பலருடன் தொடர்பு கொண்டிருந்ததாக இந்திய புலனாய்வுத்துறை கண்டறிந்துள்ளது.
இதற்கிடையில், கேரளாவின் கசராகோட் பகுதியில் வசிக்கும் ஐந்து இளம் முஸ்லிம் குடும்பங்கள் அப்பகுதியை விட்டு வெளியேறி 2016ல் சிரியாவுக்கு தப்பிச் சென்றுள்ளன. இக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளதாகவும் அவர்களில் பலர் இலங்கைக்கு வந்து தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் உறுப்பினர்களை சந்தித்துள்ளதாகவும் இந்திய புலனாய்வுத்துறை கண்டறிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
No comments