ஜனாதிபதிக்கு கடிதம் எழுத முஜிபுர் தீர்மானம்! எது தொடர்பில் தெரியுமா ?
கொரோனா வைரஸ் பரவலை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தனியார் வைத்தியசாலைகளில் பாரிய மாபியா இடம்பெற்று வருகின்றது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
அரசாங்கம் உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட தொற்றாளர்களுக்கான சிகிச்சைக்கு குறைந்தபட்ச கட்டணங்களை அறவிடும் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இது குறித்து ஜனாதிபதியிடம் முறைப்பாட்டு கடிதம் ஒன்றையும் ஒப்படைக்க தயாராகி வருவதாக அவர் கூறினார்.
நாடளாவிய ரீதியில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரையும் அரச மருத்துவமனைகளில் அனுமதிக்க முடியாத நெருக்கடி நிலையொன்று காணப்படுகின்றது.
இந்த சூழ்நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் தனியார் வைத்தியசாலைகள் தமது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் கொவிட் தொற்றாளர்களிடம் சிகிச்சை கட்டணமாக இலட்சக்கணக்கான ரூபாவை அறவிடும் நிலையொன்று காணப்படுகின்றது.
நானும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன்.
அப்போது எனக்கும் இவ்வாறான நிலையொன்று ஏற்பட்டது. அதனாலேயே இதன் உண்மைத்தன்மை என்னவென்பதை என்னால் உணர முடிந்தது.
சாதாரண மக்கள் அரச மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை காரணமாக தமது உயிரை காப்பாற்றிக்கொள்ள தனியார் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களிடம் இலட்சக்கணக்கான பணத்தை கொள்ளையடித்தால் அவர்கள் நிலை என்னவாகும்.
எனவே கொரோனா வைரஸ் பரவலை வைத்துக்கொண்டு மிகப்பெரிய மாபியா இடம்பெற்று வருகின்றது. அரசாங்கம் இதனை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டில் சகலரும் கொரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் சகலருக்கும் ஒரே விதமான சிகிச்சைகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டும். அதுமட்டுமல்ல இந்த ஊழல் மோசடிகள் குறித்து ஜனாதிபதிக்கு முறைப்பாட்டு கடிதம் ஒன்றினை ஒப்படைக்கவுள்ளேன்.
ஜனதிபதியேனும் தலையிட்டு செயலணிக் கூட்டங்களின் ஊடாக உரிய தரப்பை வலியுறுத்தி மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும் என்றார்
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments