கோட்டாபய அரசின் நோக்கம் என்ன? அம்பலப்படுத்திய தேரர்
தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர் நாட்டுமக்களை ஏமாற்றி, இன மற்றும் மதவாதத்தைத் தூண்டி, பொய்யானதொரு 'தேசப்பற்று' என்ற மாயையை உருவாக்கி, அதனூடாகவே ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டது என்று உலபனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது டீபசிய அவர்,
அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி தற்போது நாட்டிலுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 15 ஆயிரத்தை விடவும் அதிகரித்துள்ளது. ஆனால் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தினால் இதற்கு முற்றிலும் முரணான தகவல்களே வெளியிடப்பட்டுள்ளன.
தொற்றுநோய்த்தடுப்புப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள எண்ணிக்கையை விடவும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதனால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வாகும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
எனவே தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர் நாட்டுமக்களை ஏமாற்றி, இன மற்றும் மதவாதத்தைத் தூண்டி, பொய்யானதொரு 'தேசப்பற்று' என்ற மாயை உருவாக்கி, அதனூடாகவே ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டது. அவ்வாறு பொய் கூறுவதையே கொள்கையாகவைத்து ஆட்சிபீடமேறிய அரசாங்கம், தற்போது அத்தகைய பொய்களையே தொடர்ந்தும் கூறி ஆட்சியை முன்னெடுத்து வருகின்றது.
அரசாங்கம் பதவியேற்றுக்கொண்டதன் பின்னர் முதலாவதாக நாட்டின் ஜனநாயகத்தை முழுமையாக சீர்குலைக்கும் வகையில் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றினார்கள். அந்தத் திருத்தத்தின் ஊடாக இதுவரைகாலமும் நாடாளுமன்றத்திடமும் மக்களிடமும் காணப்பட்ட அதிகாரங்கள் அனைத்தும் தனியொரு நபரின் கைகளில் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் முன்னர் நாட்டுமக்களுக்கு நன்மையளிக்கும் வகையில் செயற்படுவோம், அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்று கூறியவர்கள் இப்போது எங்கே? சீனாவிற்கு மாத்திரமே அரசாங்கமும் ஜனாதிபதியும் அச்சப்படுகிறார்கள் என்றே முதலில் நினைத்தோம். ஆனால் இவர்கள் அனைவருக்கும் பயம் என்பது இருநாட்களுக்கு முன்னர் பிலியந்தலை பிரதேசத்தில் நடைபெற்ற சம்பவத்தின் ஊடாக உறுதியாகியுள்ளது.
பொதுவாக ஒருவர் முகக்கவசம் அணியாவிட்டால், அவருக்கு தண்டனை வழங்கப்படும்.ஆனால் அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிலியந்தலை பிரதேசம் 8 மணித்தியாலத்திற்கும் குறைவான காலத்தில் காமினி லொக்குகேயின் உத்தரவிற்கமைய மீண்டும் திறக்கப்பட்டது. அவ்வாறெனில் காமினி லொக்குகேயிற்கு எதிரான ஏன் இதுவரையில் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை? இவ்வாறான பல்வேறு சம்பவங்கள் மூலம் இந்த அரசாங்கம் தலைவரொருவரின்றி பயணிப்பது தெளிவாகின்றது.
எனினும் அதனால் ஏற்பட்ட தாக்கங்களை நாட்டின் மக்களே அனுபவிக்கின்றார்கள். இந்த அரசாங்கம் வெளியிடுகின்ற வர்த்தமானி அறிவித்தல்கள் அல்லது புதிதாகக் கொண்டுவரப்படும் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் வரையில் அவை உண்மையில் அமுலில் உள்ளனவா? இல்லையா? என்ற கேள்வி இருக்கின்றது.
பசுவதை தொடர்பில் அரசாங்கம் தீர்மானமொன்றைக் கொண்டுவந்தது. எனினும் அது தற்போதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதேபோன்று புர்கா தொடர்பிலும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அனைத்திற்கும் கூச்சலிடுகின்ற ஒரு சிறுபிரிவினரைத் திருப்திப்படுத்துவதற்காகவே அரசாங்கம் இத்தகைய தற்காலிகத் தீர்மானங்களை மேற்கொள்கின்றது. மாறாக நாட்டின் நலனை வலுப்படுத்துவதற்கான நோக்கம் எதுவும் அதிலில்லை.
தற்போது நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதோ, அதிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதோ அரசாங்கத்தின் நோக்கம் அல்ல. மாறாக துறைமுகநகரத்தை இலங்கை சட்டத்திற்குள் அடங்காதவாறு எவ்வாறு சீனாவிற்கு வழங்குவது என்பதிலேயே கவனம் செலுத்தியுள்ளது.
நாட்டை சீர்குலைக்கும் வகையிலான தீர்மானங்களை மேற்கொள்ளும் போது, அனைவரையும் கவரக்கூடிய சில வார்த்தைகளைக் கூறுவது வழக்கமாக இருந்துவருகின்றது. அந்தவகையில் தற்போது அபிவிருத்தி மற்றும் வளர்ச்சிக்கான முன்னுதாரணமாக சீனா இருப்பதாகக் கூறுகின்றார்கள்.
கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், இந்த நெருக்கடி நிலையிலிருந்து எவ்வாறு வெளிவருவது என்ற தர்க்கமே நாடாளுமன்றத்தில் உருவாகவேண்டும். அரசியல் கொள்கை மற்றும் கட்சிபேதங்களைப் புறந்தள்ளி சர்வகட்சி மாநாட்டில் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து, அனைவரினதும் ஒத்துழைப்புடன் இந்த சவாலுக்குத் தீர்வுகாண முற்படவேண்டும். அதன்மூலமே எமது நாடு இந்த நெருக்கடியிலிருந்து மீளமுடியும் என்றார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments