சம்பள முரண்பாடுகளுக்கு உடனடி தீர்வு வழங்குமாறு கோரி மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்
சம்பள முரண்பாடுகள் மற்றும் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை வழங்கப்பட வேண்டிய 25 சதவீத சம்பள உயர்வு ஆகியவற்றைத் தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அரசாங்கத்தை வலியுறுத்தி இலங்கை மின்சார சபை ஊழியர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டம், மின்சார சபை ஊழியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (வியாழக்கிழமை) கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டோர், சம்பள விவகாரம் தொடர்பாக எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
இதேவேளை கடுமையான பொருளாதார துயரங்கள் இருந்தபோதிலும், கடந்த ஏப்ரல் 7ஆம் திகதி கூடிய இயக்குநர்கள் குழு, தொழிலாளர்கள் கோரிய சம்பள உயர்வுக்கு பரிந்துரை செய்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டதும் சம்பள உயர்வு நடைமுறைக்கு வரும் எனவும் உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையில் சம்பள முரண்பாடுகள் தீர்த்து வைக்கப்படும் வரை போராட்டங்கள் தொடரும் என மின்சார சபை ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments