எதிர்வரும் இரண்டுவாரங்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு முகக்கவசங்களை உரிய வகையில் அணிய வேண்டும் என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் விசேட வைத்திய நிபுணர் நீலிக்க மலவிகே தெரிவித்திருக்கிறார்.
சித்திரை புத்தாண்டின் பின்னர் நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது. உருமாற்றம் அடைந்த வைரஸானது விரைவாக பரவக்கூடியது. இது ஒருவரிலிருந்து ஐந்து பேருக்கு பரவக் கூடியது என அவர் கூறினார்.
இந்த வைரஸின் நோய் அறிகுறிகள் இளம் தரப்பினரிடையே வெளிப்படும் என்றும் பேராசிரியர் நீலிக்க மலவிகே தெரிவித்தார். கொவிட் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
அஸ்ராசெனக்கா கொவிட் தடுப்பூசியின் முதலாம் டோஸ் ஏற்றிக் கொண்டவர்களுக்கு அதன் இராண்டாவது டோஸ் நிச்சயம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். இதேவேளை எதிர்வரும் இரண்டு வாரகாலம் தீர்க்கமாக அமையவுள்ளதால் அவசியமற்ற பயணங்களையும் நிகழ்வுகளையும் நிறுத்தி கொவிட் ஒழிப்புக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தன மக்களை கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மக்கள் பொறுப்பற்ற வகையில் செயற்படுவார்களாயின் இந்தியாவை போன்ற நிலை ஏற்படலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இந்த வார இறுதி நாட்களில் அத்தியாவசிய தேவைகள் தவிர ஏனைய தேவைகளுக்காக வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன கேட்டுக் கொண்டார்.
No comments