நாடு கடத்தப்பட்ட தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் இலங்கையை வந்தடைந்தனர்
சுவிட்சர்லாந்து, ஜேர்மன் ஆகிய நாடுகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 24 இலங்கையர்கள், நாடு கடத்தப்பட்டு சிறப்பு விமானத்தின் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
அதன்படி ஜேர்மனியிலிருந்து 20 பேர், சுவிட்சர்லாந்திலிருந்து 4 பேர் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லுமாறு இராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளதாக குடிவரவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தனிமைப்படுத்தல் முடிவடைந்ததும் இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதுடன், அதன் பின்னர் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மனிய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 100 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து Dusseldorf விமான நிலையத்திற்கு முன்பாக தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அந்த நாட்டின் இடதுசாரி கட்சிகள் மற்றும் ஏனைய போராட்ட அமைப்புகளைச் சேர்ந்த பலரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அத்தோடு, புகலிடம் கோரியவர்களின் அகதி விண்ணப்பங்களின் மீள் பரிசீலனை அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் இறுதி நேரத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எவ்வாறிருப்பினும் இலங்கையின் பாதுகாப்புப் படையினரால் சித்திரவதை செய்யப்பட்டதாக அறிக்கைகள் தெரிவித்தபோதிலும் 31 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
No comments