ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்புக்கான வர்த்தமானியை வெளியிட தொழில் ஆணையாளர் பரிந்துரை!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாயான அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதற்கு, தொழில்துறை ஆணையாளரால் அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆயிரம் ரூபாய் சம்பள விவகாரம் குறித்து ஆராய்வதற்காக இன்று (திங்கட்கிழமை) வேதன நிர்ணய சபை ஒன்று கூடியது.
இதன்போது, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பதற்கு ஏற்கனவே வேதன நிர்ணய சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு முதலாளிமார் சம்மேளனம் எதிர்ப்புத் தெரிவித்தது. எனினும், தொழிற்சங்கள் வேதன நிர்ணய சபையின் தீர்மானத்துக்கு ஆதரவாக நின்றன.
இந்நிலையில், சம்பள அதிகரிப்புக்கான நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தொழில்துறை ஆணையாளர், நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட அரசாங்கத்துக்குப் பரிந்துரைப்பதாக அறிவித்தார்.
குறித்த ஆயிரம் ரூபாயில் அடிப்படைச் சம்பளம் 900 ரூபாய் எனவும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 100 ரூபாய் என்றும் வகுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments