Header Ads

மக்களின் எதிர்ப்பால் உருத்திரபுர தொல்லியல் அகழ்வு கைவிடப்பட்டது..!


கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் மேற்கொள்ளப்படவிருந்த தொல்லியல் அகழ்வு நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டது. குறித்த பகுதியில் அமைந்துள்ள உருத்திரீஸ்வரர் ஆலய வளாகத்தில் தொல்லியல் அகழ்வு பணிகளை முன்னெடுக்க இன்றைய தினம் குறித்த திணைக்கள அதிகாரிகள் வருகை தந்திருந்தனர்.

இன்று மூன்றாவது நாளாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குறித்த பணியை மேற்கொள்ளவிடாது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில் வளாகத்தின் பிரதான வாயிலை மூடி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குறித்த நடவடிக்கையை மேற்கொள்ள விடாது தடுத்தனர்.

இதன்போது அங்கு வருகை தந்திருந்த பொலிசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடனும், வருகை தந்திருந்த அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அமைதி நிலைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

பொதுமக்களின் எதிர்ப்புக்கான காரணம் தொடர்பில் இதன்போது பொலிசாரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. தொடரந்து குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு இரு தரப்பினரையும் அழைத்து சுமுகமான முறையில் தீர்ப்பது தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் கூடியிருந்த பொது மக்களால் மகஜர் ஒன்றும் பொலிசாரிடம் கையளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வருகை தந்திருந்த தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதுடன், இன்றைய அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த தொல்லியல் அமைவிட பகுதியில் எவ்வித மாற்றங்களையும் செய்யக்கூடாது எனவும், மேலதிக விசாரணை மற்றும் நடவடிக்கைகள் வரை எவ்வித அகழ்வு பணிகளும் இடம்பெறாது எனவும் பொலிசார் வாக்குறுதி அளித்ததாக கிளிநொச்சி சிம்யா மிசன் சுவாமிகள் சிவேந்திர சைதன்யா தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.