Header Ads

".. சிறுவர்களின் சண்டைகளில் துப்பாக்கி வெடிக்குமா..



ரீன்ஏஜ் என்கின்ற பதின்ம வயதைக் கொண்டிருக்கின்ற இளையோர் மத்தியில் கொலைகளில் முடிவடைகின்ற அளவுக்கு மோசமான வன்முறைகள் மலிந்து வருகின்றனவா?

பாரிஸ் புறநகர்களில் கடந்த ஓரிரு நாட்களில் நடந்த குழு மோதல்கள், துப்பாக்கிச் சூட்டில் சிறுவர்கள் மூவர் கொலையுண்டமை இந்தக் கேள்வியை எழுப்பி உள்ளது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் பொண்டி (Bondy - Seine-Saint-Denis) பகுதியில் 15 வயதுச் சிறுவன் ஒருவன் தனது தந்தையின் கண் முன்பாக மார்பில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான்.

".. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மகனை மட்டும் சரியாக இலக்கு வைத்து  சுட்டனர். விளையாட்டுத்துப்பாக்கி என்று நினைத்தேன். போலி வேட்டு அவன் மார்பில் சுட்டதாக நம்பினேன். என் கண் முன்பாகவே அவன் உயிரிழந்து வீழ்ந்தான்...." 

".. சிறுவர்களின் சண்டைகளில் துப்பாக்கி வெடிக்குமா.. என்னதான் நடக்கிறது.. நம்பமுடியவில்லை.."- என்று வெதும்புகிறார் 15 வயதுடைய அய்மனின் (Aymen) தந்தையார் அஹமெட் (Ahmed).

பொண்டியில் உள்ள நெல்சன் மண்டேலா  நிலையத்தில் (l'espace Nelson-Mandela) வைத்து வெள்ளியன்று மாலை அய்மன் சுடப்பட்டான். ஸ்கூட்டர் ஒன்றில் வந்த இரு இளைஞர்கள் நிலைய வாசலில் உள்ள  தபால் பெட்டி ஊடாக அய்மனை இலக்கு வைத்துச் சுட்டனர் என்று கூறப்படுகிறது. 

பாரிஸ் புறநகரங்களில் நடக்கின்ற இதுபோன்ற கொலைகளுக்கும் போதைப்பொருள் விற்கும் கும்பல்களுக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையாளர்கள் நம்புகின் றனர்.ஆனால் அய்மனின் கொலைக்கு நண்பர்களிடையே கடந்த சுமார் ஒருவருட காலம் நீடித்துவந்த சாதாரண பகைமையே காரணம் என்பது தெரிய வந்துள்ளது. 

சம்பவத்துடன் தொடர்புடைய 19,27 வயதுடைய சகோதரர்கள் இருவர் தாங்களாகவே பொலீஸாரிடம் சரணடைந்துள்ளனர் என்று பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. பொபினி (Bobigny) சட்டவாளர் அலுவலகத்தின் தகவலின்படி அவர்கள் இருவரும் கொலைக்குற்றத்துக்கான தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இதேபோன்று கடந்த வாரம் Essonne மாவட்டத்தில் பதின்ம வயதுச் சிறுவர் குழுக்களுக்கு இடையே மூண்ட மோதல்களில் 14 வயதுடைய சிறுவன் ஒருவனும் சிறுமி ஒருத்தியும் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை குறிப்பிடத் தக்கது.


No comments

Powered by Blogger.