Header Ads

தமிழர்கள் தொடர்ந்தும் இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர் – சிறிதரன்!


தமிழர்கள் தொடர்ந்தும் இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 22ம் திகதி ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடர் மார்ச் 23ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இம்முறையும் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் பன்னாட்டுத் தளங்களில் தமிழர் இயக்கத்துடன் இணைந்து செயல்படும் ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின் (ECOSOC) ஊடாக இக்கூட்டத்தொடரில் கலந்துகொள்ளும் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள்  கொரோனா தொற்று காரணமாக இணையவழி ஊடாக கூட்டத்தொடரில் இணைந்து கொண்டு கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர், “அரசாங்கத்தினால் தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டனர் என ஐநாவின் மனித உரிமைப் பேரவையின் உயர் ஆணையாளரும் 10 சிறப்பு பொறிமுறை அதிகாரமுள்ளவர்களும் தங்களது அறிக்கையில் சுட்டிக்காட்டியதற்கு நன்றி தெரிவிக்கிறோம்.

ஆனால் அவர்கள் தமிழர்கள் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று கூறுவதற்கு மறந்துவிட்டனர்.

இலங்கையில் உள்ள வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் இன அழிப்புசெய்யப்பட்டு 12 ஆண்டுகள் முடிந்து இன்னும் காலநீடிப்பு தர இந்தப் பேரவை விரும்புகிறது.

தமிழர்கள் தொடர்ந்து இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இராணுவ அடக்குமுறைக்கு கீழ் தங்களது பண்பாட்டு, சமூக, பொருளாதார, அரசியல், குடிமை உரிமைகளுக்காக போராடிக்கொண்டிருக்கின்றனர்.

கீழ்காணும் பரிந்துரைகளை வைத்து இலங்கைமீது தீர்மானம் கொண்டுவரும் முக்கிய குழுவும் மனித உரிமை உறுப்பினர்களும் உறுதியான தீர்மானத்தை கொண்டுவர கேட்டுக்கொள்கிறேன்.

இலங்கையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும். சுதந்திரமான பன்னாட்டு விசாரணை பொறிமுறை நடத்தவேண்டும். இலங்கைக்கான சிறப்பு ஆய்வாளரை நியமிக்கவேண்டும்.

தமிழர்களின் தன் நிர்ணய உரிமையையும் அவர்களின் எதிர்பார்ப்புகளையும் அறிந்து உறுதி செய்ய ஐநாவின் மேற்பார்வையில் வாக்கெடுப்பு நடத்தவேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.