Header Ads

உமிழ்நீர் மூலம் வைரஸ் சோதனை சிறுவர் பாடசாலைகளில் ஆரம்பம்


குமாரதாஸன்.

பிரான்ஸில் விடுமுறைக்குப் பின்னர் பாடசாலைகளில் சிறுவர்களைப் பெருமெடுப்பில் வைரஸ் பரிசோதனை க்கு உட்படுத்தும் திட்டத்தைக் கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளது.
"சலிவா" (saliva) எனப்படும் உமிழ்நீர் மூலமான வைரஸ் பரிசோதனைகள் பாலர் மற்றும் ஆரம்பப் பிரிவுப் பாடசாலைகளில் (les écoles maternelles et élémentaires) நடத்தப்பட்டுவருகின்றன. ஆய்வுகூட மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பள்ளிகளில் நேரடியாக சிறுவர்களது உமிழ் நீரைச் சேகரித்துச் சோதனைக்கு அனுப்பி வருகின்றனர்.
பரிசோதனை முடிவுகள் 48 மணித்தியா லங்களுக்குள் பெற்றோருக்கு வழங்கப் படுகின்றன. சோதனை அறிக்கைகள் தொற்றை உறுதிப்படுத்தினால் அதனைப் பெற்றோர்களே நேரடியாகப் பாடசாலை நிர்வாகத்துக்குத் தெரியப் படுத்த வேண்டும்.
இல்-து-பிரான்ஸ் பிராந்தியத்தில் உமிழ் நீர்ப் பரிசோதனைகள் நேற்று திங்கட் கிழமை ஆரம்பமாகியது. சிறுவர்களது உமிழ் நீர் நாக்கின் கீழ்ப் பகுதியில் இருந்து பெறப்பட்டு சிறிய புட்டிகளில் சேகரிக்கப்படுகிறது.
உமிழ்நீர் பரிசோதனை என்பது ஏனைய கொரோனா வைரஸ் பரிசோதனை முறைகளை ஒத்தது அல்ல. அது நேரடியாக வைரஸ் தொற்றை இனங்காணும் ஒரு சோதனையும் அல்ல. பொதுவாக உடலில் ஏற்படக்கூடிய தொற்றுக்கள், நோயெதிர்ப்பு அறிகுறி, அழற்சி, போன்றவற்றைக் கண்டறி வதற்கு உமிழ் நீர் முக்கிய நோயறிதல் நுட்பமாகப் பயன்படுத்தப்படுகிறது.
சலிவா முறை மூலம் வாராந்தம் 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் என்ற கணக்கில் சிறுவர்களைச் சோதனைக்கு உட்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தொற்று அதிகம் உள்ள இடங்களில் முன்னுரிமை அடிப்படையில் சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன.
சிறுவர்கள் பெரும் எண்ணிக்கையில் சோதனையிடப்படுவதால் வரும் நாட்களில் பாடசாலைகளில் அதிக தொற்றாளர்கள் இனங்காணப் படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.


No comments

Powered by Blogger.