Header Ads

கொரோனா பரவலுக்கு மத்தியில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பம்!



கொரோனா பரவலுக்கு மத்தியில் 2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன.

எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த பரீட்சையில் 6 இலட்சத்து 22 ஆயிரத்து 352 பேர் தோற்றவுள்ளனர்.

இவர்களில் 4 இலட்சத்து 33 ஆயிரத்து 746 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என்பதுடன், நாடு முழுவதும் 4 ஆயிரத்து 513 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சகல மாவட்டங்களிலும் குறைந்த பட்சம் இரண்டு விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உட்பட சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளின் பிரகாரம் சுகாதார வழிமுறைகள் பேணப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சையின்போது ஒவ்வொரு பரீட்சை நிலையத்திற்கும் வழமையான மேற்பார்வையாளர் நோக்குனர்களுக்கு மேலதிகமாக கொவிட் வைரஸ் தொற்றுத் தொடர்பில் விசேட நோக்குனரொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் கொவிட் தொடர்பான சகல நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாகவிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், தனிமைப்படுத்தல் குடும்பங்களில் இருந்து வரும் பரீட்சார்த்திகளுக்கு தனியான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, இன்று ஆரம்பமாகவுள்ள சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் பரீட்சை நிலையங்களில் கடமையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு விசேட பேருந்து சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபைத் தலைவர் கிஞ்சிலி ரணவக்க தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.