Header Ads

இலங்கை தொடர்பாக ஐ.நா.வில் புதிய பிரேரணை!



ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை குறித்து பதிய பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை தொடர்பான கோர் குழு (Core Group) உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கை தொடர்பான கோர் குழுவில் கனடா, ஜேர்மனி, மொன்டிநீக்ரோ, வடக்கு மசடோனியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இந்நிலையில், ஜெனீவாவுக்கான இங்கிலாந்து தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான ஜூலியன் ப்ரைத்வைற், இலங்கைக்கான பிரேரணையைச் சமர்ப்பிக்கும் முடிவை நேற்று (திங்கட்கிழமை) ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அறிவித்துள்ளார்.

2021 பெப்ரவரி 22 முதல் 2021 மார்ச் 23 வரை நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வுக்கான திட்டங்கள் குறித்த ஆலோசனையின்போது இலங்கை தொடர்பான கோர் குழுவின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான பிரேரணை ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என ப்ரைத்வைற் கூறியுள்ளார்.

மேலும், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் அண்மையில் இலங்கை குறித்து வெளியிட்டு கடுமையான அறிக்கையின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட், கடந்த மாதம் இலங்கை குறித்து ஒரு கடுமையான அறிக்கையை வெளியிட்டார்.

அதில், இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயங்களை உள்நாட்டுப் பொறிமுறைகள் ஊடாகத் தீர்த்துக் கொள்ள முடியாது போயுள்ள நிலையில், அந்த விடயத்தை சர்வதேச பொறிமுறைகளுக்குப் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமைகள் ஆணையாளர் உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அத்துடன், கடந்தகால மனித உரிமை மீறல்களை இலங்கை கவனிக்கத் தவறியமை மற்றும் இத்தகைய மீறல்கள் மீண்டும் மீண்டும் நிகழும் அபாயத்தைக் கணிசமாக உயர்த்தியுள்ளதாக ஐ.நா. அறிக்கையில் எச்சரிக்கப்பட்டிருந்தது.

மேலும், தண்டனையைக் கடுமையாக்குதல் மற்றும் அரச திணைக்களங்களில் இராணுவ அதிகாரிகளை நியமித்தல், இன மற்றும்தேசியவாத சொல்லாட்சி, சிவில் சமூகத்தை அச்சுறுத்தல் போன்ற கடந்த ஆண்டில் நிகழ்ந்த விடயங்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றவாளிகளுக்கு எதிராகச் சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகள் போன்ற பொருளாதாரத் தடைகளையுத் ஆணையாளர் முன்மொழிந்தார்.

இந்நிலையில், ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளதுடன், இதற்கு பதில் அறிக்கையை ஐ.நா.மனித உரிமைகள் சபைக்கு அனுப்பியுள்ளது.

அதேநேரம், இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு மாற்றும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, இலங்கையில் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு கடிதம் அனுப்பியித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.