Header Ads

வடக்கு மாகாணத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்தது!



வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்து ஆயிரத்து நான்கு பேராக அதிகரித்துள்ளது. கடந்த 2020 மார்ச் முதல் நேற்று வரையாக காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம், மாந்தை மேற்கில் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் உட்பட வடக்கில் நேற்று மாத்திம் 42 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட 443 பேரின் பி.சி.ஆர். பரிசோதனையில் 29 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் மன்னார் மாந்தை மேற்கைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்கள் கடந்த வாரம் திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்தனர். அந்த திருமண நிகழ்வில் மன்னார் ஆடைத் தொழிற்சாலை தொற்றாளர்களுடன் தொடர்புடையோரும் பூநகரி வலைப்பாடு கிராமத்தில் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் பங்கேற்றுள்ளனர்.

அவ்வாறு திருமண நிகழ்வில் பங்கேற்றவர்களிலேயே ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 24 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மன்னார் மடு பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவருக்குத் கொரோனா தொற்றுள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலையில் விபத்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் பொறுப்பு தாதிய உத்தியோகத்தர், தாதிய உத்தியோகத்தர் மற்றும் நோயாளி ஒருவருக்கும் என மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண்ணொருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது வீட்டுக்கு மன்னாரில் உள்ள உறவினர்கள் வந்து திரும்பிய நிலையில் தொற்று அறிகுறியுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனைவிட, யாழ்ப்பாணம் பல்கலைகழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் பருத்தித்துறையைச் சேர்ந்த 13 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டதாக மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.