Header Ads

பௌத்த உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!



அகில இலங்கை பௌத்த காங்கிரஸினால் பௌத்த உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று(வெள்ளிக்கிழமை) முற்பகல் கையளிக்கப்பட்டது.

2018ஆம் ஆண்டு பௌர்ணமி தினத்தில் மிஹிந்தலை புனித பூமியில் ஸ்தாபிக்கப்பட்ட இந்த ஆணைக்குழு நாடு முழுவதும் ஈராண்டுகளுக்கு அதிக காலம் ஆதாரங்களை திரட்டி இவ்அறிக்கையை தயாரித்துள்ளது.

அகில இலங்கை பௌத்த காங்கிரஸின் தலைவர் ஜகத் சுமதிபாலவினால் ஆணைக்குழு அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த சந்தர்ப்பத்தில் பௌத்த உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பாலித பெர்னாண்டோ (ஓய்வுபெற்ற நீதிபதி) உள்ளிட்ட ஆணைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதனுடன், நவீன பௌத்த மத வரலாறு மற்றும் பௌத்த மாநாடுகளின் நூற்றாண்டு மலரும் பிரதமருக்கு வழங்கப்பட்டது.

இலங்கையின் பாரம்பரியம் அனைவருக்கும் சொந்தமானது என சுட்டிக்காட்டிய புதிய சிஹல ராவய தேசிய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர், இந்நாட்டின் தொல்பொருள் மதிப்புகளை தமிழ் மொழிக் கல்வியில் சேர்ப்பது குறித்து ஆராயுமாறு பிரதமரிடம் இதன்போது கேட்டுக் கொண்டார்.

அச்சந்தர்ப்பத்திலேயே அது தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேசிய பாரம்பரியம் குறித்த அத்தியாயத்தை தமிழ் மொழிக் கல்வியில் இணைப்பது குறித்து ஆராய்ந்து அறியத்தருமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவிற்கு பணிப்புரை விடுத்தார்.

குறித்த நிகழ்வின்போது பௌத்த உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான சந்திர நிமல் வாகிஸ்ட, பேராசிரியர் நிமல் சில்வா, விசேட வைத்திய நிபுணர் நரேந்திர பிந்து, பேராசிரியர் மாலனி மெதகம உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.