மாகாண சபைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் - ஈ.பி.டி.பி. பரிந்துரை!
மாகாண சபையை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை வலுவாக நடைமுறைப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு அமைய வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.
புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழுவிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் நேற்று (சனிக்கிழமை) கையளிக்கப்பட்ட பரிந்துரைகளிலேயே குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பரிந்துரைகளை ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவினர், புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழுவின் தலைவர் றொமேஸ் டி சில்வா தலைமையிலான நிபுணர் குழுவிடம் கையளித்தனர்.
இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும், மாகாண சபையை மேலும் வலுப்படுத்தும் ஏற்பாடுபாடுகளும் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் நிபுணர் குழுவிற்கு ஈ.பி.டி.பி. பரிந்துரைத்துள்ளது.
இதேவேளை, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் காரணமாக உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான அதிரகாரங்களைப் பயன்படுத்தும் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொண்டவர்கள் சந்தர்ப்பத்தினைப் பாழாக்கிவிட்டனர் என்று குற்றஞ்சாட்டி வருகின்ற ஈ.பி.டி.பி., மாகாண சபை முறைமையை முழுமையாக அமுல்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து, முன்நோக்கி நகர்வதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை அடைந்து கொள்ள முடியும் என சுட்டிக்காட்டியுள்ளது.
No comments