Header Ads

"உங்களது கொள்கை களைப் பிள்ளைகளின் சாப்பாட்டுக் கோப்பையில் வைக்காதீர்கள்"



 பாடசாலைகள் தொடங்கும் போது கன்ரீன்களில் மாணவர்களுக்கு மாமிசம் இல்லாத மதிய உணவை வழங்குவது என்று லியோன்(Lyon) நகர மேயர் எடுத்துள்ள முடிவை அரசு கண்டித்து ள்ளது.நாட்டின் பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கத்தை அவர் மாற்ற முனைகிறார் என்று கண்டனங்கள் எழுந்துள்ளன.

பிள்ளைகளது உடல் ஆரோக்கியத்துடன் விளையாட வேண்டாம் என்று நாட்டின் விவசாய அமைச்சர் மேயரின் முடிவைக் விமர்சித்துள்ளார். "உங்களது கொள்கை களைப் பிள்ளைகளின் சாப்பாட்டுக் கோப்பையில் வைக்காதீர்கள்" என்று அவர் தனது ருவீற்றரில் பதிவிட்டுள்ளார்.
விவசாயிகளையும் இறைச்சிப் பண்ணையாளர்களையும் அவமதிக்கின்ற ஏற்றுக்கொள்ள முடியாத செயல் இது என்று உள்துறை அமைச்சர் Gerald Darmanin தெரிவித்திருக்கிறார்.
பசுமைக் கட்சி ஒன்றின் உறுப்பினரான லியோன் நகர மேயர் Gregory Doucet பாடசாலைகளில் சுகாதார விதிகளை இறுக்கமாகப் பேணும் வகையில் மாணவர்களுக்கு ஒரே வரிசையில் உணவை வேகமாகப் பரிமாறி முடிக்க வசதியாகவே மாமிச உணவைத் தவிர்க்க முடிவு செய்ததாக விளக்கம் அளித்துள்ளார்.அது தற்காலிகமான ஓர் ஏற்பாடு என்றும் அவர் கூறியுள்ளார்.
மேயரின் இந்த தீர்மானம் நாடெங்கும் விவாதங்களை உருவாக்கி உள்ளது.
நடுத்தர மற்றும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் தமது வளர்ச்சிக்கு அவசியமான புரத உணவை பள்ளிக் கன்ரீன்களில் மாத்திரமே பெற்றுக் கொள்கின்றனர் என்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால் ஊட்டச் சத்து நிபுணர்களோ மாமிசம் இல்லாத சைவ உணவு குழந்தைகளுக்குப் பாதுகாப் பானது என்று கூறுகின்றனர். புரதம் இரும்பு மற்றும் பிற தாதுப் பொருள்கள் போதிய அளவு சேர்க்கப்படுவது உறுதி செய்யப்பட்டால் மாமிச உணவு கட்டாயமானது அல்ல என்று அவர்கள் விளக்கமளிக்கின்றனர்.
பிரான்ஸில் 2018 ஆம் ஆண்டின் சட்டம் பாடசாலைகளில் வாரத்தில் ஒருநாள் மாமிசம் இல்லாத மதிய உணவை வழங்குவதைக் கட்டாயமாக்குகின்றது.
உலகில் இறைச்சிக்காக விலங்குகள் வகை, தொகை இன்றிப் பெருக்கிக் கொல்லப்படுவது வைரஸ் போன்ற தொற்று நோய்களுக்கும் பருவ நிலை மாறுதல்களுக்கும் மூல காரணங்களில் ஒன்றாக இருப்பதை காலநிலை மற்றும் சூழலியலாளர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி எச்சரித்து வருகின்றனர்.
பிரான்ஸில் கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் கடந்த ஆண்டு நடைபெற்ற நகரசபைத் தேர்தல்களில் நாட்டின் பல முக்கிய நகரங்களில் சூழல் ஆதரவுக் கட்சிகளும் அவர்களோடு கூட்டணி அமைத்தவர்களும் வெற்றி பெற்றிருந்தனர். நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகிய லியோனையும் அவ்வாறு சூழல் ஆதரவு பசுமைக்கட்சிக் கூட்டணியே(Europe Ecology – The Greens) கைப்பற்றியது.
கொடிய வைரஸ் அச்சுறுத்தல் மக்களின் கவனத்தை சூழல் பாதுகாப்பின் பக்கம் ஈர்த்திருப்பதையே தேர்தல் முடிவுகள் பிரதிபலித்துள்ளன என்று அச்சமயம் கூறப்பட்டது.
லியோனின் பாரம்பரிய இறைச்சி உணவு வகைகள் உலகப் புகழ் வாய்ந்தவை. ஆனால் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்குப் பின்னர் நிலைமை மாறிவருகிறது. மாமிசம் அற்ற தாவரப் புரத உணவுகள் புழக்கத்துக்கு வரத் தொடங்கி உள்ளன.
பிரான்ஸில் அண்மையில் மாமிசம் இல்லாத சைவ உணவைப் பரிமாறு கின்ற உணவகம் ஒன்று (vegan restaurant) மிகச் சிறந்த உணவகத்துக்கான நாட்டின் அதி உயர் நட்சத்திர விருதை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.