Header Ads

தற்கொலைதாரியாக தாக்குதல் நடத்த சத்தியம் செய்த யுவதி!



உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதலின் பிரதான தற்கொலைதாரியான சஹ்ரான் ஹசீமினால் தற்கொலை தாக்குதலுக்காக 15 பெண்கள் பயிற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவனெல்லை பிரதேசத்தில் கடந்த 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பயிற்சி பெற்ற 15 பெண்களில் 5 பேர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சாய்ந்மருது பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 3 பேர் பின்னர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், மாவனெல்லையில் 24 வயதான யுவதி உள்ளிட்ட ஏனைய 7 பேரும் கைதாகியிருந்தனர். அனைவரும் தற்போது விளக்கமறியலிலும் மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவின் பொறுப்பில் உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டு சஹ்ரான் ஹாஷிமின் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட தாம், எந்த நேரமும் தற்கொலை தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக சத்தியம் செய்ததாக அந்த யுவதி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். இப்ராஹிம் ஷஹீதா என்ற 24 வயது யுவதி மாவனெல்லையில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

மவானெல்லை பகுதியில் புத்தர் சிலைகளை சேதமாக்கிய குற்றச்சாட்டில் கைதாகிய சகோதரர்களான முகமது யுஹைம் ஷாஹித் அப்துல் ஹக் மற்றும் முகமது யுஹைம் ஷாதிக் அப்துல் ஹக் ஆகியோர் தற்போது சிறையில் உள்ளனர். அவர்களது சகோதரியே கைது செய்யப்பட்டுள்ளார். தந்தை இப்ராஹீம் மௌலவியும் அப்போது கைது செய்யப்பட்டிருந்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து இந்த யுவதி கைது செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.