எமது உணர்வு எமது உரிமை - 3 நீதிமன்றங்கள் தடை
அம்பாறை, பொத்துவில் பிரதேசத்திலிருந்து திருகோணமலை, பொலிகண்டி வரைக்கும் பொத்துவில் - யாழ்ப்பாண பிரதான வீதியினூடாக நடைபெறத் திட்டமிட்டுள்ள எதிர்ப்புப் போராட்டம் மற்றும் வாகனப் பேரணி நடைபெறுவதைத் தடுப்பதற்கான தடையுத்தரவை, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம், கல்முனை நீதவான் நீதிமன்றம் மற்றும் களுவாஞ்சிக்குடி நீதிமன்றம் ஆகியவை பிறப்பித்துள்ளன.
ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வின்போது மக்களைத் தூண்டிவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் ஏனைய அமைப்புக்கள் இந்தப் போராட்டத்தை நடத்துவதாக தெரிவித்து, திருக்கோவில், கல்முனை, களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேசங்களின் பொலிஸார், அந்தந்த நீதிமன்றங்களில் தாக்கல் செய்த அறிக்கையின் பிரகாரம், எதிர்ப்புப் போராட்டம் மற்றும் வாகனப் பேரணி என்பனவற்றை நடத்த நீதிமன்றங்கள் தடைவிதித்துள்ளன.
இந்தத் தடையுத்தரவு பற்றிய அறிவிப்புக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட 32 பேருக்கும் பொலிஸாரால் கையளிக்கப்பட்டுள்ளன.
“கொவிட் 19 தொற்று மிக வேகமாகப் பரவக் கூடிய இக்காலகட்டத்தில் மேற்படி செயலானது பொதுச் சுகாதாரத்துக்குப் பங்கத்தை ஏற்படுத்தும் என்பதால், பொதுமக்களின் உயிர், சுகாதாரம் என்பனவற்றுக்குப் பாதிப்புக்கள் ஏற்படும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இருந்து விலகி இருக்குமாறு, மேற்படி நபர்களுக்கு கட்டளையிடப்படுகிறது” என நீதிமன்றக் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments