Header Ads

பாரிஸ் 14 ஆம் வட்டாரத்தில் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன் !!



பாரிஸ் Nanterre பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் தனது விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது மரணம் தொடர்பாக விசாரணை கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இருபது வயதான அந்த மாணவனின் மரணத்துக்கான காரணம் இன்னமும் உறுதியாகத் தெரியவரவில்லை. ஆனால் அந்த மாணவன் கடைசியாக வெளியிட்ட ருவீற்றர் பதிவில் ஒருபாலினத்தவர்கள் இடையிலான பாலியல் வன்முறைச் சம்பவம் ஒன்றில் தான் பெரிதும் பாதிக்கப்பட்டதை வெளிப்படுத்தி இருந்தார்.அத்தகைய வன்முறைகளுக்கு எதிராக #MeTooGay என்ற இணையப் பிரசார இயக்கத்தையும் தொடக்கி இருந்தார்.
தனது சமூகவலைத் தளப் பதிவில் அந்த மாணவன், பாரிஸ் 14 ஆம் வட்டாரத்தில் (XIVe arrondissement) இருந்து நகரசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட சோசலிசக் கட்சியின் உறுப்பினர் ஒருவரால் தான் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார் என்ற பரபரப்பான தகவலை வெளியிட்டிருந்தார்.
"குடும்பத்தவர்களை விட்டுத் தனித்து இருந்த நிலையில், தூங்க ஒரு இருப்பிடம் இல்லாத சூழ்நிலையில், சம்பந்தமில்லாத உறவு மூலம் எனது இளமையையும் அப்பாவித்தனத்தையும் சாதகமாகப் பயன்படுத்தி வன்முறை புரியப்பட்டதாக உணர்கிறேன்"
-இவ்வாறு அந்த மாணவன் 2018 இல் தனக்கு நேர்ந்த ஓர் அனுபவத்தை ருவீற்றர் பதிவில் விவரித்திருந்தார்.
ஆனால் மாணவனின் தற்கொலைக்கும் அந்தச் சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்துகின்ற வேறு ஆதாரங்கள் எதுவும் இன்னமும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மாணவனால் பெயர் குறிப்பிடப் பட்டிருக்கும் சோசலிஸக் கட்சிப் பிரமுகர் Maxime Cochard தன் மீதான குற்றச் சாட்டை மறுத்துள்ளார்.
ஒருபாலின பாலியல் பலாத்காரங்களை அம்பலப்படுத்துவதற்காக #MeTooGay என்னும் இணையப் பிரசாரத்தின் தொடக்க செயற்பாட்டாளராகத் தன்னை வெளிப்படுத்திய பின்னர் திடீரென இளம் மாணவன் தற்கொலை செய்து கொண்டமை சக பல்கலைக் கழகங்களின் மாணவரிடையே பெரும் உணர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களும் பொது மக்களும் பாரிஸில் உள்ள சோசலிஸக் கட்சித் தலைமையகத்தின் முன் வாயிலில் திரண்டு மாணவனுக்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாரிஸ் நகர மேயர் ஆன் கிடல்கோ உட்பட பிரான்ஸ் சோசலிஸக் கட்சியின் பிரமுகர்கள் பலர் அஞ்சலிப் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
(படம் :சோசலிஸக் கட்சியின் தலைமை யக வாசலில் மாணவனுக்கு அஞ்சலி.)

No comments

Powered by Blogger.