Header Ads

நாட்டின் எல்லைகளும் வணிக வளாகங்களும் மூடப்படுகின்றன!

 


( குமாரதாஸன் )

பொது முடக்கத்தைத் தவிர்ப்பதற்கு மற்றொரு சந்தர்ப்பம் வழங்க முடிவு.

பிரான்ஸ் அரசு பொது முடக்கத்தைத் தவிர்த்து பதிலாக சில புதிய கட்டுப்பாடுகளை இன்றிரவு திடீரென அறிவித்துள்ளது.
அதன்படி ஐரோப்பிய ஒன்றியம் தவிர்ந்த ஏனைய நாடுகளில் இருந்து பயணிகள் வருவது ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தொடக்கம் தடைசெய்யப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் இருந்து வருவோர் அனைவரும் கட்டாய வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப் படுவர்.
20,000 சதுர மீற்றருக்கு (square meters) அதிக பரப்பளவில் இயங்கும் உணவு தவிர்ந்த பல் பொருள் வணிக வளாகங்கள் அனைத்தும் ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு முதல் மூடப்படுகின்றன. ("centres commerciaux non alimentaires de plus de 20.000 mètres carrés")
பாடசாலைகள் தொடர்ந்து இயங்கும். வீட்டில் இருந்து தொழில் புரிவதை மேலும் ஊக்குவிக்க உத்தரவிடப் படுகிறது.
இந்த விவரங்களை பிரதமர் Jean Castex இன்றிரவு அறிவித்தார். பாதுகாப்புச் சபையின் கூட்டம் முன் கூட்டியே இன்று மாலை ஆறு மணிக்குத் திடீரெனக் கூட்டப்பட்டது. அங்கு சுமார் இரண்டரை மணிநேரங்கள் நீடித்த ஆலோசனை களின் முடிவில் பிரதமர் செய்தியாளர் களுக்கு விளக்கமளித்தார்.
எதிர்பார்க்கப்பட்டது போன்று தேசிய அளவிலான பொது முடக்கத்துக்குச் செல்வதற்கு முன்பாக - அதைத் தவிர்க்கும் ஒரு சந்தர்ப்பமாக - சில கட்டுப்பாடுகளை மட்டுமே அறிவிப்பது என்று பாதுகாப்புச்சபை முடிவு செய்துள்ளது. தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு விதிகளை மேலும் தீவிரமாகக் கண்காணிப்பதற்குப் பொலீஸாருக்கு அதிகாரம் வழங்கவும் தீர்மானிக்கப் பட்டுள்ளது.
புதிய வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற போதிலும் அயல் நாடுகளுடன் ஒப்பிடும் போது பிரான்ஸின் நிலைமைகள் முழு அளவிலான முடக்கம் ஒன்றைத் தவிர்ப்பதற்கு இன்னொரு சந்தர்ப்பத்தை வழங்கக் கூடிய கட்டத்திலேயே உள்ளன என்று பிரதமர் தெரிவித்தார்.
பொது முடக்கம் ஒன்றைத் தவிர்ப்பதற்கு "எங்களுக்கு நாங்களே மேலும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கக் கூடிய நிலையில் இன்னமும் இருக்கிறோம்" என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
மூன்றாவது தேசிய பொது முடக்கம் ஒன்றை அதிபர் மக்ரோன் இந்த வார இறுதியில் அறிவிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பை ஊடகங்கள் வெளியிட்டிருந்தமை தெரிந்ததே.

No comments

Powered by Blogger.