அபாய நிலையில் கொழும்பு மாவட்டம்! வைத்திய அதிகாரிகள் எச்சரிக்கை
இலங்கையில் மேல் மாகாணத்தில் கொரோனா பரவல் அபாயம் மீண்டும் அதிகரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் அதிகளவான நோயாளர்கள் நேற்றைய தினம் 480 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதி வைத்தியர் ஹரித அழுத்கே, ஊடக சந்திப்பில் கொரோனா நோயாளர்களுக்காக வைத்தியசாலைகளில் ஒதுக்கப்பட்டுள்ள கட்டில்களின் எண்ணிக்கையானது அதன் கொள்ளளவை தற்போது அண்மித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டம் முழுவதிலும் தொற்று பரவியுள்ளமை பாரிய நிலைமையாகும்.
எந்தக் காரணத்தினால் கொழும்பு மாவட்டத்தில் இவ்வாறு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்.
நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களில் நேற்றைய தினம் 75 சதவீத நோயாளர்கள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்றைய நாளில் 423 பேர் குணமடைந்த நிலையில், 843 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இதனடிப்படையில், சிகிச்சைக் கட்டமைப்புக்குள் 420 புதிய கட்டில்களின் தேவை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறாக குணமடைந்து வெளியேறுபவர்களை விடவும் இரண்டு மடங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டால், எதிர்வரும் நாட்களில் கட்டமைப்பு ரீதியான பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, நோய் அறிகுறிகளுடன் புதிதாக அடையாளம் காணப்படும் நோயாளர்களை வைத்தியசாலைகளில் அனுமதிப்பதில் இடப்பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதி வைத்தியர் ஹரித அழுத்கே கூறியுள்ளார்.
No comments