Header Ads

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு ஆளுமையான ஆளுனர்களை நியமித்தல் வேண்டும்

 


 (எஸ்.அஷ்ரப்கான்)


வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு ஆளுமை, திறமை மிக்க புதிய ஆளுனர்களை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸ நியமிக்க வேண்டும் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் அதியுயர் பீட கூட்டம் சுமார் மூன்று மாத காலத்துக்கு பிற்பாடு எதிர்வரும் 31 ஆம் திகதி கல்முனையில் உள்ள தலைமை காரியாலயத்தில் இடம்பெறுகின்றது. சங்கத்தின் இவ்வருடத்துக்கான முதலாவது உயர்பீட கூட்டமும் இதுவே ஆகும்.

இது குறித்து நேற்று புதன்கிழமை காரைதீவு இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோது எஸ். லோகநாதன் மேலும் தெரிவித்தவை வருமாறு

பொதுநல, சமூக, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல தீர்மானங்கள் எமது உயர்பீட கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளன. புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பிற்பாடு புதிய ஆளுனர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். வடக்கு, கிழக்குக்கான தற்போதைய ஆளுனர்கள் ஆளுமை, திறமை அற்றவர்கள். எனவே ஆளுமையான, திறமையான ஆளுனர்களை இம்மாகாணங்களுக்கு ஜனாதிபதி நியமித்து தர வேண்டும்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், எமது தொழிற்சங்கத்தின் போசகருமான டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சராக பதவி வகித்து வருகின்ற நிலையில் கிடைத்தற்கு அரிய இந்த வாய்ப்பு மூலமாக எமது மீனவ உறவுகளின் அன்றாட அடிப்படை வாழ்வாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்பட வேண்டும்.

முறையற்ற இட மாற்ற உத்தரவுகள் காரணமாக எமது ஊழியர்கள் தற்போதைய கொரோனா காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக வருடாந்த இட மாற்றம் என்கிற பெயரில் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. நாடு வழமைக்கு மீள்கின்ற வரை இந்த இட மாற்ற உத்தரவுகளை பொது நிர்வாக அமைச்சு தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்க வேண்டும்.

ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான உரிமை தற்போது முஸ்லிம் உறவுகளுக்கு மறுக்கப்பட்டு இருக்கின்றது. அரசாங்கம் இவர்கள் விடயத்தில் நடுநிலையாக சிந்தித்து சரியான தீர்மானத்தை எடுத்தல் வேண்டும். இவை உள்ளிட்ட பல முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளோம். 

No comments

Powered by Blogger.