Header Ads

வலி கிழக்கு பிரதேச சபைத் தவிசாளராக தியாகராஜா நிரோஷ் 



வலி கிழக்கு பிரதேச சபைத் தவிசாளராக
தியாகராஜா நிரோஷ் தெரிவு செய்யப்பட்டார்.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளராக தியாகராஜா நிரோஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

சட்ட விதிகளின் பிரகாரம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் ஆகியோரைத் தெரிவு செய்வதற்கான  முதலாவது அமர்வு இன்று புதன்கிழமை (04.04.2018) மாலை 2 மணிக்கு உள்ள10ராட்சி ஆணையாளர் ம. பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் நடைபெற்றது. 

இக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மனித உரிமைச் செயற்பாட்டாளரும் முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான தியாகராஜா நிரோஷ் பிரேரிக்கப்பட்டார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் சண்முகராஜா சிறிகுமரன் பிரேரிக்கப்பட்டார். ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் தவிசாளர் தெரிவிற்காக பிரேரிக்கப்பட்ட நிலையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இவ் வாக்கெடுப்பு உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்ததற்கு அமைய பகிரங்க வாக்கெடுப்பாக நடத்தப்பட்டது. 

வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட தியாகராஜா நிரோஷ் 24 வாக்குகளைப் பெற்றார். வலி கிழக்கு பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 15 ஆசனங்களைப் பெற்று முன்னிலையிலிருந்த நிலையில், ஆறு ஆசனங்களைப் பெற்றிருந்த ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் மூன்று ஆசனங்களைப் பெற்றிருந்த சுதந்திரக் கட்சி உள்ளிட்டவை தமது வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கின. 04 ஆசனங்களைப் பெற்றிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் 03 ஆசனங்களைப் பெற்றிருந்த சுயேற்சைக்குழு என்பன நடுநிலை வகித்தன. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் சபைக்கு தாமதமாக வருகை தந்தமையினால் ஏற்கனவே தவிசாளர் தெரிவு முடிவடைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.  

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் போட்டியிட்ட  சண்முகராஜா  சிறிகுமரன் தனது கட்சியில் தெரிவு செய்யப்பட்ட 06 உறுப்பினர்களின் வாக்குகளையும் பெற்றார்.

 இந் நிலையில் உள்ளுராட்சி ஆணையாளரினால் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட தியாகராஜா நிரோஷ் வலி கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபையின் தவிசாளராக அறிவிக்கப்பட்டார். பிரதித் தவிசாளராக மகேந்திரலிங்கம் கபிலன் பிரேரிக்கப்பட்டார். வேறுயாரும் பிரதித் தவிசாளருக்கு பிரேரிக்கப்படாமையினால் வாக்கெடுப்பின்றி கபிலன் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

No comments

Powered by Blogger.