Header Ads

அரசியல் ஸ்திரத்தன்மைக்கு மிகவும் ஆபத்தானதும் கூட




 தே.காவின் அக்கரைப்பற்று நகர சபையினது புதிய மேயர் மற்றும் பிரதி மேயர் அறிவிக்கப்பட்டிருந்தனர். இதனை தொடர்ந்து அக்கரைப்பற்றின் ஒரு சில இடங்களில் சிறிய சல சலப்புக்கள் தோன்றியதாக அறிய முடிகிறது. இதனை பாரிய கலவரம் போன்று சிலர் காட்ட முற்படுகின்றனர். அதிலும் குறிப்பாக மு.காவினர் என்றாலும் தவறில்லை. இவர்கள் ஏன் இப்படி செய்தார்கள் என சிந்திக்கும் போது, அவர்களின் அறியாமையையும், ஏமாளித்தன்மையையும் பார்த்து பரிதாபப்படுவதை விட, வேறு எதுவும் செய்ய முடியாது.

கடந்த அக்கரைப்பற்று நகர சபை தேர்தலில், முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் இரு புதல்வர்கள் களமிறக்கப்பட்டிருந்தனர். இதில் ஒருவர் முன்னாள் நகர சபை மேயர். அதாவுல்லாஹ் அமைச்சர் எனும் பலமிக்க அதிகாரங்களோடு இருந்த போதே, தனது மகனை மேயராக்கி அழகு பார்த்திருந்தார். இப்போது அவர் எந்த அரசியல் அதிகாரத்திலும் இல்லை. எதிர்காலத்தில் அரசியல் அதிகாரம் பெறுவதற்கான வாய்ப்புக்களும் மிக அரிதாகவே உள்ளன. இவ்வாறான நிலையில் இன்னுமொருவருக்கு அரசியல் அதிகாரம் வழங்குவது, அவரது அரசியல் ஸ்திரத்தன்மைக்கு மிகவும் ஆபத்தானதும் கூட. அன்று அவர் உருவாக்கிய தவம் தான், இன்று அவரை அழிக்கும் கோடாரி காம்பாக மு.காவினர் பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

ஏற்கனவே, அதாவுல்லாஹ்வின் மகனான அஹமட் ஸக்கி மேயராக இருந்திருந்தார். இவர் அதே நகர சபையில், ஒரு சாதாரண உறுப்பினராக இருக்க ஒரு போதும் விரும்பமாட்டார். அவர் மாத்திரமல்ல, எவரும் விரும்பமாட்டார். அவ்வாறு வழங்கப்படுமாக இருந்தால், சக்கியை விட குறித்த நபரே மேயருக்கு தகுதியானவராக, முன்னாள். அமைச்சர் அதாவுல்லாஹ்வே கூறியதாக அமைந்துவிடும். இது அஹமட் சக்கியின் எதிர்கால அரசியல் வாழ்வை மிக அதிகமாக பாதிக்கும். இவ்வாறனவற்றை வைத்து சிந்திக்கும் போது, முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ், தனது மகனை விடுத்து, இன்னுமொருவருக்கு மேயர் அதிகாரத்தை வழங்குவார் என நம்புவதை போன்ற மடமையும், ஏமாளித்தனமும் வேறு எதுவும் இராது.

இந்த விடயம், இப்படி அப்பட்டமாக இருந்த நிலையில் தான், முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் இத் தேர்தலை எதிர் கொண்டிருந்தார். அதாவது, இப்போது அவர் தனது மகனை கள்ள வழியில், மேயராக்கவில்லை என்பதற்கு இது போதுமான நியாயமாகும். அவர் எங்கும், யாருக்கும் மேயர் வாக்குறுதி அளித்த கதைகளுமில்லை. அவரது இரு புதல்வர்கள் தேர்தல் கேட்கிறார்கள் என அறிந்தும், குடும்ப ஆட்சி வரப்போகிறதே என்ற எந்த சிந்தனையுமின்றி, முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் மீது கொண்ட பற்றின் காரணமாக, அக்கரைப்பற்று மக்கள் அவரையே ஆதரித்திருந்தனர். இது போன்ற குடும்ப ஆட்சியை எனது மனமும் ஏற்றுக்கொள்ளவில்லை தான். இங்கு பார்க்க வேண்டியது எனதினதோ, உங்களினதோ கருத்தையல்ல, அக்கரைப்பற்று மக்களின் கருத்தையேயாகும். அக்கரைப்பற்றில் வேட்பாளர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் சொந்தக்காரர் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வே தவிர,  குறித்த வேட்பாளர்கள் அல்ல. இவற்றின் மூலம் நான் கூற வருவது, தான் நினைத்ததை செய்யும் தகுதியை அக்கரைப்பற்று மக்கள் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வுக்கு வழங்கியுள்ளார்கள் என்பதையேயாகும்.

இது பற்றி மு.காவின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் கதைப்பது தான் நகைச்சுவையாக உள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தல் காலப்பகுதியில், மு.காவினால் ஏதோ ஒரு பதவி அக்கரைப்பற்றுக்கு தரப்படும் என்ற பகிரங்க வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது. அது தவத்துக்கான மாகாண சுகாதார அமைச்சு என்ற கதையும் இருந்தது. சல்மானின் தேசியப்பட்டியலை நஸீர் பெற்றுக்கொள்ள, நசீரின் மாகாண அமைச்சை தவம் பெற்றுக்கொள்வதே அந்த சமன்பாடு. இதனை மையப்படுத்தி தவம், மு.காவின் மூத்த போராளியான ஹசனலிக்கு காய் வெட்டிய கதைகளும் உள்ளன. ஹசனலி தேசியப்பட்டியலை பெற்றுவிட்டால், தனது கணக்கு பிழைத்து விடுமல்லவா? இறுதி வரையில் அது வழங்கப்படவே இல்லை. அது பற்றி கேள்வி எழுப்ப திராணியற்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம், அதாவுல்லாஹ் தனது மகனை மேயராக்கியதன் மூலம், ஏனையோரை பொன்ஸ் என்றுவிட்டார் என கூப்பாடு போடுவதில் அர்த்தமில்லை.

No comments

Powered by Blogger.